விமான தாமதத்தால் வேலையை இழக்கும் வெளிநாட்டு பணியாளர்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தாமதம் காரணமாக தென்கொரியாவிற்கு தொழில்வாய்பிற்காக செல்லும் மற்றுமோர் குழுவினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் 12 மணி நேரம் தாமதமாகியமையால், தென்கொரியாவின் இன்சியோனுக்கு செல்லும் 60 புலம் பெயர் தொழிலாளர்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விமானம் இரவு 8.50 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிழை ஏற்பட்டதால் விமானம் தாமதமாகியதாக கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு தற்காலிகமாக தங்குவதற்காக அருகிலுள்ள ஹோட்டலுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தின் தாமதத்திற்கு அதிருப்தி வெளியிட்ட மனுஷ நாணயக்கார, இந்த 800வது குழுவை தென் கொரிய வேலைகளுக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தென் கொரிய மனித வளத் திணைக்களம் குறித்த குழுவை அனுப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 10 மணிநேரம் தாமதமானதை அடுத்து, மே மாதத்தில் இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version