வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (21.06) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை, அத்துடன், வவுனியா, மில் வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடியமை மற்றும் ஒலிபெருக்கி திருடப்பட்டதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த நகையினை வீட்டில் வைத்து விட்டு வீட்டார் வவுனியா நகருக்கு வேலை நிமித்தமாக சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் பின்கதவு திறக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டு அலுமாரிகளும் திறக்கப்பட்டிருந்தன.
வீட்டு அலுமாரிகளை பார்வையிட்ட போது அதில் இருந்த நகைகளை காணவில்லை. இதனையடுத்து வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயக்கொடியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பி.கஜேந்திரன் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் திசநாயக்கா (37348), பொலிஸ் கொன்டபிள் தயாளன் (91792) உள்ளடங்கிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 10 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட நிலையில் நகையும் மீட்கப்பட்டதுடன், ஆலய ஒலிபெருக்கியும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.