பொகவந்தலாவை இளைஞன் கைது-பொலிஸாருக்கு எதிராக ஜீவன் கண்டனம்

பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு இளைஞன் ஒருவருக்கும், வங்கி முகாமையாளருக்கும் இடையில் கடந்த 22 ஆம் திகதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடந்த்து
வங்கி முகாமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அறிவிப்பை அடுத்து பொகவந்தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு சென்று சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது அங்கு கூடியிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். இழுபறிகளின் பின்னர் குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பொலிஸார் தான்தோன்றித்தனமாக செயற்பட்டனர் என விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது குழுவினருடன் நேற்று (24.06.) பொகவந்தலாவ நகரிற்கு சென்று உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்து இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளார்.

“இதன்போது, கைது செய்யப்பட்ட இளைஞர் தரப்பில் உள்ள நியாயத்தை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த நான், இது விடயத்தில் சில பொலிஸ் அதிகாரிகள் தமது அதிகார எல்லையை மீறும் வகையில் செயற்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினேன்” என ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

“இளைஞரை கைது செய்த பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரித்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நான் இதன்போது வலியுறுத்தினேன்.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதே பொலிஸார் பொறுப்பாகும். மாறாக சட்டத்தை கையில் எடுத்து செயற்படுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது எனவும் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் நான் தெரிவித்தேன்” என மேலும் அமைச்சர் ஜீவன் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version