மேற்கிந்திய அணிக்கு இரண்டாவது தோல்வி, சிம்பாவே முதலிடம்.

சிம்பாவேயில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டி தொடரின் குழு A இற்கான போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ளன. சிம்பாவே அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி நேற்று(26.06) மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற்று 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தை பெற்றுள்ளது. நேபாளம் அணி 2 புள்ளிகளையும், அமெரிக்கா அணி புள்ளிகளின்றியும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ள.

நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 374 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. நிக்லொஸ் பூரான் 104 ஓட்டங்களையும், ப்ரண்டன் கிங் 76 ஓட்டங்களையும் பெற்றனர். பஸ் டி லீட், சஹிப் ஸுல்பிக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து போட்டியை சமன் செய்தது. இதில் டேஜா நீடாமன்று 111 ஓட்டங்களையும், ஸ்கொட் எட்வெர்ட்ஸ் 67 ஓட்டங்களையும் பெற்ற்றனர். பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 3 விக்கெட்களையும், அல்ஷாரி ஜோசப், அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

சுப்பர் ஓவரில் நெதர்லாந்து அணியின் வன் பரீக் ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சில் 30 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொண்டார். மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்களை இழந்து 8 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இன்னுமொரு போட்டியில் சிம்பாவே அணி அமெரிக்கா அணியை 304 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஓட்டங்களினால் பெறப்பட்ட இரண்டாவது பெரிய வெற்றி இதுவாகும். சிம்பாவே அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சீன் வில்லியம்ஸ் 174 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஜொய்லோர்ட் கம்பி 78 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அபிஷேக் பராத்கர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய அமெரிக்கா அணி 25.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிம்பாவே அணியின் பந்துவீச்சில் ரிச்சர்ட் நகர்வா, சிகண்டர் ரஷா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version