கின்னஸ் சாதனையை முறியடித்த புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்!

புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் சாரணர் மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் 150வது வருட நிறைவினை முன்னிட்டு ‘பிளாஸ்டிக்கை கடந்து செல்வோம்’ என்ற தொனிப்பொருளில், விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்றுமுன்தினம் (01.07) முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஆர்.யே.பிரபாகரன் தலைமையில் புனித மிக்கேல் சாரண படையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில், ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு யேசு சபை துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம், நிகழ்விற்கு அதிதிகளாக 231 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் திலுப்ப பண்டார, உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எந்திரி சிவலிங்கம், வலயகல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரும், மாவட்ட சாரணர் ஆணையாளர் விவேகானந்தன், சாரண குழு ஆசிரியர் பத்மநாதன், பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஏனைய பாடசாலைகளின் சாரண மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 29 நிமிடம் 57 செக்கனில் ஐம்பது சாரணர் மாணவர்களினால் 2124 பிளாஸ்ரிக் வெற்று பொத்தல்களினால் 150 என்ற இலக்கத்தை அமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் கின்னஸ் சாதனைக்கான பரிந்துரை நடுவர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் வாகரை பிரதேச செயலக கணக்காளர், சந்திரகலா ஜேயேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டு தமது கடமையினை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் சோழன் புத்தக உலக சாதனை நிறுவனத்தினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை நிகழ்வின் போது 2022/2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி விருது பெற்ற பாடசாலை சாரணர் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பாக்கு நீரினை நீந்தி கடந்த தவேந்திரன் மதுசிகனுக்கு வெற்றி கேடயம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version