நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது – பேராயர்!

நாட்டின் தேசிய சொத்துக்களை விற்று, அதன் ஊடாக பணம்பெற்று, உணவு உண்ண வேண்டும் என்பதை ஊக்குவிக்க கூடாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மக்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமையளிக்காது சர்வாதிகார ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்ட மூலத்துக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 120 பேர் மாத்திரமே விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும், இந்த சட்ட மூலத்தின் ஊடாக மக்களின் பணத்தை தனது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் இதுவரையிலும் அது தொடர்பில் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் பேராயர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தலில் போட்டியிட்டால் எவருக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனக் கூறிய அவர், மக்களின் விருப்பத்துக்கு முன்னுரிமையளிக்காத , ஜனநாயகம் முடக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சியே தற்போது காணப்படுகிறது எனவும் கூறினார்.

நாட்டில் உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டுமே தவிர , தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்று அதன் ஊடாக பணத்தைப் பெற்று உணவு உண்ண வேண்டும் என்பதை ஊக்குவிக்கக் கூடாது என்றும் இந்த நிலைமையை மாற்றியமைக்காவிட்டால் இனிவரும் காலங்களில் முற்று முழுதாக ஏனைய நாடுகளிடம் கையேந்தும் நாடாக இலங்கை மாற்றமடைந்து விடும் எனவும் அவர் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version