சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்குமிடையில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரில் இலங்கை அணி 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை மகளிர் அணி, நியூசிலாந்து மகளிர் அணியை ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரில் வெற்றி பெறுவது இதுவே முதற் தடவையாகும். இந்த தொடரின் முதற் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடனான முதல் ஒரு நாள் வெற்றியினை பதிவு செய்தது. நேற்று(03.07) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது.

இந்த தொடரில் இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தப்பத்து அதிரடியாக இரண்டு சதங்களை பெற்று தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்ததோடு தொடர் நாயகி விருதையும் தனதாக்கினார். இந்த இரண்டு சதங்கள் மூலம் 3000 ஓட்டங்களை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் கடந்த முதல் வீராங்கனையாக தனது பெயரை பதிவு செய்துள்ளார். அத்தோடு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 8 சதங்களோடு கூடுதலான சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மழை குறுக்கிட்ட நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து மகளிர் அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சுய்ஸ் பெட்ஸ் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும், ஷோபி டிவைன் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 29 ஓவர்களில் 196 ஓட்டங்ள் என்ற வெற்றியிலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சாமரி அத்தப்பத்து அதிரடியாக துடுப்பாடி 80 பந்துகளில் 140 ஓட்டங்களை பெற இலங்கை அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. நிலக்சி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். சமாரி மற்றும் நிலக்சி இணைந்து 190 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இந்த வெற்றிகளின் மூலம் உலக சம்பியன்ஷிப் பட்டியலில் இலங்கை அணி இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 20-20 தொடர் 8,10,12 ஆம் திகதிகளில் பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version