இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11.07) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொண்டு, இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் சமூக மற்றும் பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு, இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

அதேபோல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த இந்திய விஜயம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா சந்தித்து கலந்துரையாடினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version