குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!

சுவீடனில் இடம்பெற்ற குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்காமல், உலகளாவிய தெற்கின் மதிப்பு அமைப்பை மதிக்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”மதத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பான முழு கருத்தியலும் தற்போது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அண்மையில் சல்வான் மோமிகா என்பவர் சுவீடனில் உள்ள துருக்கி தூதரகம் முன் குர்ஆனை எரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குரான் எரிப்பதற்கு பொலிஸார் அனுமதி மறுத்தாலும் அது கருத்து தெரிவிக்கும் உரிமை என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலே பொலிஸார் செயல்பட்டார்கள். புனித குர்ஆன் எரிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவீடனுக்கு அனைத்து நாடுகளாலும் அழுத்தம் கொடுத்தன.

அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேல் கூட இதை செய்யப்படக்கூடாத ஒன்று என்று கூறியது. இது ஏபிரகாமின் கடவுள் பற்றிய புனித நூல் என்றும், இதை அவமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புனித குர்ஆனை எரிப்பது அருவருக்கத்தக்க மற்றும் அவமரியாதைக்குரிய மற்றும் தூண்டிவிடும் செயல் என்றும் சுவீடன் தெரிவித்துள்ளது. ஆனால் கருத்துச் சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

இந்த பதிலைத் தொடர்ந்து ஒரு சில மேற்கத்தேய அரசாங்கங்கள் இது கருத்துச் சுதந்திரம் என்று கூறின. அவ்வாறு இதனை கருத்துச் சுதந்திரத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் தற்போது ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்றுள்ளது.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதோடு 13ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனீவாவில் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. இப்போது எழும் கேள்வி இதுதான்.

இது மதச் சுதந்திரத்தை மீறுவதாக நாம் அனைவரும் கருதுகிறோம். ஆனால் இதை கருத்து சுதந்திரத்தின் கீழ் கொண்டுவர முயற்சி நடக்கிறது. எல்லாவற்றையும் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் கொண்டு வர முடியாது. அதற்கு ஒரு வரையறை இருக்க வேண்டும்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது மேற்குலக நாடுகளுக்கு பின்னடைவாக அமையும் என சில அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. இது மேற்கு அல்லது கிழக்கு அல்லது வடக்கு அல்லது தெற்கு பிரச்சினை அல்ல. இது மதத்தைப் பின்பற்றும் உரிமை பற்றிய கேள்வியாகும்.

நான் முஹம்மது நபியைப் பின்பற்றுபவன் அல்ல. ஆனால் திருக்குர்ஆன் மிகவும் மதிப்புமிக்க நூல் என்று நான் நினைக்கிறேன். பகவத் கீதை மற்றும் பைபிளையும் நாம் அதேபோன்று பயன்படுத்தலாம். இதேபோன்று தம்ம பதத்திலும் அல்லது திரிபிடகத்திலும் பயனுள்ள விடயங்களைக் கண்டறியும் பௌத்தர் அல்லாதவர்களும் இருக்கின்றனர்.

எனவே நாம் அனைவரும் இதை மதத்தின் மீதான தாக்குதலாகக் கருதுகிறோம். ஆனால் ஒரு சில மேற்கத்தேய நாடுகளின் கருத்துப்படி இது ஒரு கருத்துச் சுதந்திரமாகும். ஏனென்றால் அவர்கள் குழப்பத்தை மறைக்க கருத்துத் தெரிவிக்கும் எண்ணக்கருவை விரிவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.

அதனால் மேற்கத்தேய விழுமியங்களை பரப்புவதற்காக கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது. அதேபோல் அந்த விழுமியங்களை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version