பெரும்போக நெற் செய்கை, ஏனைய பயிர்ச் செய்கைகள், மரக்கறிகள் மற்றும் பழப் பயிர்ச் செய்கைக்குத் தேவையானதும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்றதுமான நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதல் தொகுதி, இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இன்று (20) அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் திரவப் பசளையை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பெரும்போக நெற் செய்கையை ஆரம்பித்துள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி, கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்று, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்தார்.
உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்ற உயர் ரக பசளை வகையான இந்தத் திரவப் பசளையானது, பயிருக்குத் தேவையான நைட்ரஜன் போஷாக்கைத் திறம்படப் பெற்றுக்கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் IFFCO நிறுவனத்தினால், நெனோ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரவப் பசளையில் காணப்படும் நைட்ரஜன் கூறு, நேரடியாகத் தாவர இலைகளால் உறிஞ்சப்படுகிறது என, கமநலத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ்.எச்.எஸ். அஜந்த டீ சில்வா தெரிவித்தார்.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 31 இலட்சம் லீற்றர் திரவ நைட்ரஜன் பசளையில் 5 இலட்சம் லீற்றர், இவ்வாரத்தில் இலங்கைக்கு வந்தடையவுள்ளது.