இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான தடையை நீக்க முடியுமெனவும், அதன் மூலம் மத்திய வங்கிக்கு எந்தவித அழுத்தமும் ஏற்படப்போவதில்லை எனவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான இறக்குமதியை செய்வதற்கான நிலையை இலங்கை தொட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இறக்குமதியை அதிகரிக்க முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய திட்ட நடைமுறையின் கீழ் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும், இறக்குமதியை அதிகரிக்க செய்வதன் மூலம் அதனை ஏற்படுத்த முடியுமெனவும், மேலும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக மேலும் 900 பொருட்களுக்கான தடையை நீக்க முடியுமெனவும் இருப்பினும் அதற்குள் வாகன இறக்குமதி உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பொருட்களை எவ்வாறான நடைமுறைகளின் கீழ் இறக்குமதிக்கு அனுமதிப்பது என்பது தொடர்பில் நிதியமைச்சே முடிவெடுக்குமெனவும் தெரிவித்துள்ள ஆளுநர் ஏனைய பொருட்களின் இறக்குமதியை டொலர் மற்றும் நாட்டின் நிலைமையில் ஏற்படும் முன்னேற்றங்களை பொறுத்து செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் மீதமுள்ள 300 பொருட்களுக்கான இறக்குமதியினை ஆரம்பிக்க முடியுமெனவும் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட மதிப்பாய்வு செப்டமபர் மாதம் நடைபெறவுள்ளது. வருமான இலக்குகள் மற்றும் கிடைத்த உண்மையான வருமானத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும், அதன் மூலமாகவோ சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி வழங்கப்படுமெனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.