உலகக்கிண்ண 20-20 தொடரில் இன்றைய முதல் போட்டியாக பங்களாதேஷ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
இதில் பங்களாதேஷ் அணியின் மஹமதுல்லா 50(28) ஓட்டங்களையும் ஷகிப் அல் ஹசன் 46(37) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கபுவா மொரீ, டேமியன் ரவு, அசாத் வலா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய பப்புவா நியூ கினியா அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 97 ஓட்டங்களை பெற்றது. இதில் கிபிலின் டொரிஹா 46(34) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்களையும், மொஹமட் சைப்புடின் 2 விக்கெட்களையும் டஸ்கின் அஹமட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகனாக ஷகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டியாக ஓமான் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஓமான் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. இதில் அகுய்ப் இலியாஸ் 37 ஓட்டங்களையும், ஸிஷான் மக்சூட் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜோஷ் டேவி 3 விக்கெட்களையும், சபையான், மிச்சல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைபப்ற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 17 ஓவர்களில், 2 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களை பெற்றது. இதில் கைல் கோட்ஷர் 41 ஓட்டங்களையும், ரிச்சி பெரிங்க்டன் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
இன்றைய போட்டிகளின்படி குழு B இன் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஸ்கொட்லாந்து அணி முதலிடத்தையும் பெற்றனர்.
இதன் படி சுப்பர் 12 குழுவில் ஸ்கொட்லாந்து அணி குழு 02 இலும், பங்களாதேஷ் அணி குழு 01 இலும் இடம் பிடித்துள்ளன.
நாளையதினம் பிற்பகல் 3:30 இற்கு நம்பிபியா, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும், இரவு 7.30 இற்கு இலங்கை, நெதர்லலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் நடைபெறவுள்ளன.
இலங்கை அணி முதலிட வாய்ப்பை பெற்றுள்ளதனால் குழு 01 இல் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுப்பர் 12 குழு நிலவரம்
குழு 01 இன் அணிகள்
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ்
இந்த குழுவுக்கள் இலங்கை அணி இடம் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
குழு 02 இன் அணிகள்
இந்தியா, ஆப்பாகனிஸ்தான், நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளோடு, அயர்லாந்த்து மற்றும் நம்பிபியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இந்த குழுவில் இடம்பெறும்.
