இந்தியா A மற்றும் பங்காளதேஷ் A அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா A அணி 51 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
முதலில் துடிப்பாடிய இந்தியா A அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் யாஷ் துள் 66 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 34 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மஹேதி ஹசன், ரன்ஷிம் ஹசன் ஷகிப், ரகீப் உல் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
212 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் A அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றது. 70 ஓட்டங்கள் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. 38 ஓட்டங்களோடு மொஹமட் நைம் ஆட்டமிழந்தார். அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து சிறிய இடைவேளையில் 51 ஓட்டங்களோடு டன்ஸிட் ஹசன் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டும் சிறிது நேரத்தில் வீழ்த்தப்பட பங்களாதேஷ் பக்கமாக இருந்த வாய்ப்பு, இந்தியா பக்கமாக மாறியது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி பங்களாதேஸ் அணியை கட்டுப்படுத்தினர். 34.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து பங்களாதேஷ் அணி 160 ஓட்டங்களை பெற்றது. இந்தியா அணியின் பந்துவீச்சில் நிஷாந்த் சிந்து விக்கெட்களை கைப்பற்றினார். மானவ் சுதர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். களத்தடுப்பில் நிக்கின் ஜோஸ் 04 பிடிகளை கைப்பற்றினர்.
இந்தியா A மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி நாளை மறுதினம்(23.07) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.