அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை – ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்

அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இளம் தொழில் முயற்சியாளர்களின் அமைப்பு (YPO) அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சாகல ரத்நாயக்க இதனைக் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர் சமூகம், நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும்.ஆனால் அதனை அரசாங்கத்தின் கொள்கையாக மாற்ற முடியாது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வலுவான உற்பத்திக் கைத்தொழில் துறையையும் அபிவிருத்தியடைந்த சுற்றுலாத்துறையையும் உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு வலுவான வேலைத்திட்டம் தேவை எனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க கூறியதாவது:

சிலர் அரசியல் ஆதாயத்திற்காக நாடு வங்குரோத்தடையும் வரை காத்திருக்கின்றனர். நாடு அபிவிருத்தியடைந்தால் அரசியல் ஆதாயம் பெற முடியாது. எனவே, அரசாங்கத்தின் முன்னுரிமை அரசியலாக இருக்கக் கூடாது. அரசியல் செய்வதை விட, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வது நமது பொறுப்பு.

நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் தேவை. நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளையும் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது. வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் இளைஞர் சமூகம் தேசிய பொருளாதாரத்திற்கு சில பங்களிப்பை வழங்க முடியும். என்றாலும் அதனை அரசாங்கத்தின் கொள்கையாக மாற்ற முடியாது.

இந்நாட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு, ஒரு வலுவான உற்பத்திக் கைத்தொழிலையும், வளர்ச்சியடைந்த சுற்றுலாத் துறையையும் உருவாக்க வேண்டியது அவசியமாகும். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசு ஆதரவு வழங்குவதும் அவசியம்.

நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேலும், நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக பாதகமான விடயங்களைக் கைவிடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக நலன்புரி நன்மைகள் உண்மையிலேயே தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். எனவே, தகுதியானவர்களுக்கு சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்தே இந்த நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் வங்கிகள் வீழ்ச்சி அடையும் எனவும் வைப்புத்தொகையை இழக்க நேரிடும் எனவும் ஓய்வூதிய நிதிகள் பலவீனமடையும் எனவும் அடிப்படையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. இன்று வங்கிகள் வலுவாக உள்ளன, நிதியங்கள் மாற்றமின்றி அப்படியே உள்ளன. முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் தற்போதைய நிலையில் இருந்து குறைக்கப்படாது. நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை தருவதாக அரசு உறுதி அளித்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

எனவே, அரசியல் ஆதாயத்திற்காக இந்த திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது. அதை எதிர்த்து நிற்க வேண்டியது இளைஞர்களின் பொறுப்பாகும். இளைஞர்கள் உண்மையையும் பொய்யையும் புரிந்து கொள்வதற்காக மக்களுக்கு உதவ முடியும். இதன் மூலம் இளைஞர்களால் நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version