இனப்பிரச்சினைக்கு நடைமுறை ரீதியான தீர்வு முன்வைக்கப்படவில்லை!

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று (26.07) இடம்பெற்ற நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச, ”வடக்கு கிழக்குப் பிரச்சினை உடனடியாக எழவில்லை.பல தசாப்தங்களாக பல்வேறு அரசாங்கங்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இருப்பினும் இப்பிரச்சினைக்கு இதுவரை எவராலும் நடைமுறை ரீதியான தீர்வை முன்வைக்க முடியவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிக முக்கியமான காரணி நல்லெண்ணத்துடன் செயற்படுவதே ஆகும்.

ஜனாதிபதியின் இந்த முயற்சியானது குறுகிய கால அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கான வேலைத்திட்டமேயன்றி உண்மையான விருப்பத்துடன் முன்வைக்கப்படும் நேர்மையான நடைமுறைப்படுத்தல் அல்ல என்பதை நாம் அவதானிக்கலாம்.

இதற்கு முன்னரும் தற்போதைய ஜனாதிபதிக்கு இப்பிரச்சினை தொடர்பில் தலையிட்டு தீர்வுகளை வழங்குவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்தமை இரகசியமல்ல. அத்துடன் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடமாகியும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்குவதற்கான நியாயமான அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய முயற்சிகளில் அவர் ஈடுபடவில்லை.

கடந்த சுதந்திர தினத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண தன்னிடம் தீர்வு இருப்பதாக நாட்டுக்கு உணர்த்திய ஜனாதிபதி,குறுகிய கால அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்ள இப்பொழுது முயற்சிக்கின்றமை மிகவும் தெளிவான உண்மையாகும். இவ்வாறான சூழலில் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமா என்பது சந்தேகமே.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சியிடம் ஜனாதிபதி கேட்கின்றார். ஆனால் நடக்க வேண்டியது என்னவெனில் அரசாங்கம் ஒரு பிரேரணையை சமர்ப்பித்து அதற்கான பதிலை பெற்றுக்கொள்ள வேண்டுமேயன்றி அவ்வாறான பிரேரணை இல்லாத நிலையில் அதற்கு எவ்வாறு பதிலளிப்பது? இப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு உண்மையான விருப்பம் இருந்தால்,அவர் செய்ய வேண்டியது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினருடனும் சேர்ந்து இணங்கிய பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டும். இது அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

அவ்வாறான பிரேரணை இல்லாத நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடும் தெளிவில்லாமல் உள்ளது.அரசாங்கத்தின் முன்மொழிவுகள் மற்றும் நிலைப்பாட்டை அறிவிக்காமல் எதிர்க்கட்சியிடம் கருத்துக்களைக் கேட்பது அர்த்தமற்றது.அரசாங்கம் முன்மொழிந்த பின்னர் எதிர்க்கட்சி தனது பொறுப்புகளை நிறைவேற்ற தயாராக உள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.

மேலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இன்றியமையாத அடிப்படை விடயம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சபைகளை உடனடியாக ஜனநாயக ரீதியாக நிறுவுவது ஆகும்.

அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கைக்காக ஜனநாயக ரீதியில் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெறுவது மிகவும் முக்கியமானதும் இன்றியமையாததுமாகும். தற்போது நான்கரை ஆண்டுகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் கூட இல்லாது மாகாண சபையானது நிறைவேற்று அதிகாரத்தினால் வழிநடத்தப்பட்டு வருகின்றது.

இதனால் ஜனநாயகம் சீரழிந்து போயுள்ளதுடன் அதிகாரப்பகிர்வு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு பிரதான தடையாகவும் இது மாறியுள்ளது. எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தேவையான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஏதுவாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாகாண சபைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version