தகுதியானவர்களுக்கே அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்!

ஜனாதிபதி நேற்று சர்வ கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதியின் நேரடி உத்தரவுகளை மாகாண சபைகளில் ஆளுநர்கள் ஊடாக அமுற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொதுஜன சமுர்த்தி தொழிற்ச் சங்கம் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(27.07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட சஜித், ”ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது தேசிய முன்னுரிமைக்கு செவிசாய்க்க வேண்டும், இந்நேரத்தில் தேசிய முன்னுரிமை ஒரு தூய மக்கள் ஆணையை வழங்குவதாகும் இதன் ஊடாக நாட்டை சிறப்பாக முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் .

சமுர்த்தி வேலைத்திடமானது 17 இலட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் 40 இலட்சம் குடும்பங்களை வாடிக்கையாளர்களாகவும் கொண்ட இலங்கை சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும்.

இதில் மிகச் சிறந்த அம்சங்களும் சிறிய குறைபாடுகளும் உள்ளது. சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் எவ்வித விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளும் இன்றி தரவுகளை மையப்படுத்தாத முறைகளின் ஊடாக இந்த அஸ்வெசும தீர்மானம் அமுற்படுத்தப்பட்டுள்ளது.

வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நிதியுதவியை எப்படியோ 20 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு பொய்யான கணக்கெடுப்பு மூலம் அஸ்வெசும எனும் பெயரில் இது அமுற்படுத்தப்படுகிறது.

தாம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால், கோவிட் சூழ்நிலைக்குப் பிறகு நாட்டிலுள்ள ஒரு குடும்ப அலகின் சமூக-பொருளாதார வருமானச் செலவினக் கணக்கெடுப்பை நடத்துவதுதான் இங்கு முதலில் செய்யப்பட்டிருக்கும். வறுமைக் கோடு அடையாளம் காணப்பட்டு அதன் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு உண்மையான வறியோர் அடையாளம் காணப்பட்டிருப்பர்.

ஜூலை மாதத்தில் இதுவரை சமுர்த்தி மற்றும் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படவில்லை அனைத்து விவகாரங்களையும் குழப்பிக்கொண்டு தற்பபோது குடிசன கணக்கெடுப்பை நடத்த முயற்சிக்கின்றனர்.

Verite ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதன் பிரகாரம், இலங்கையில் மின்சார பாவனையாளர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவின் அடிப்படையில் வறுமைக் கோட்டைத் துல்லியமாக அடையாளம் காண முடியும். இது 80 சதவீதத்திற்கும் மேலான வெற்றிகரமான விஞ்ஞானபூர்வ முறை. இதன் மூலம் அஸ்வெசும நடைமுறைப்படுத்தப்படுத்தும் போது ஏற்படும் பெரும் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தகுதியானவர்களுக்கே மானியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். குறித்த தகுதியான மக்களை தரவு மைய விஞ்ஞானபூர்வ பக்கசார்பற்ற நேரடி புரிதலின் 03 முறைகள் மூலம் கண்டறிய முடியும். இது தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் தாமும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் குரல் எழுப்பத் தயார்.

எனவே பல்வேறு தரப்பினர் விரும்புகின்றனர் என்பதற்காக சமுர்த்தி கொடுப்பனவை இல்லாதொழிக்க இடமளிக்கப்படமாட்டாது. இதில் சிக்கல்கள் இருந்தால், அவற்றை சரிசெய்ய வேண்டும். தரவுகளின் அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் இந்த வேலைத்திட்டங்கள் விஞ்ஞான ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version