ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து கட்சிகளின் நிலைப்பாட்டை கோருகிறார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

13 ஆவது திருத்தம் குறித்து கட்சிகளின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்த நிலையில், இது குறித்து அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர் மேற்படி கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அரசாங்கம் 13 ஆவது திருத்தம் குறித்த  என்ன நிலைபாட்டை கொண்டிருக்கின்றது என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

அத்துடன் அரசாங்கத்துக்குள் இந்த விடயம் சம்பந்தமாக முரண்பாடான நிலைமைகள் காணப்படுவதாகவும், அது பகிரங்கமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறு இருக்கையில் தான் எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவித்த அவர், கடன் மறு சீரமைப்பு விடயங்களில் அரசாங்கம் தன்னிட்சையாக செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில் 13ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் மாத்திரம் எதற்காக அரசாங்கத்தின் முடிவை அறிவிக்காது எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டை கோருகின்றார் என்பதே இங்குள்ள பிரதான விடயமாகும் எனவும் எம்மை பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துகின்ற பொழுது நாம் எமது பரிந்துரைகளையும் கருத்துகளையும் முன்வைப்பதற்கு தயாராக இருக்கிறோம் எனவும் அவர் மேலும் கூறினார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version