வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டள்ளதாக நெளுக்குளம் பொலிசார் நேற்று (07.08) தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த 6 மாதங்களாக வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாில், முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
வவுனியாவின் நெளுக்குளம், பம்பைமடு, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் வீதிகளில் செல்வோரை வழிமறித்து சங்கிலி அறுக்கப்பட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும், தம்பனை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை வழிமறித்து சங்கிலி அறுக்கப்பட்டதாக பறயனாலங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் பறையனாலங்குளம், தம்பனை பகுதியில் சங்கிலி அறுத்தமை தொடர்பில் ஒருவரை கைது செய்திருந்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த திருட்டுச் சம்பத்துடன், ஆறு பேர் கொண்ட குழுவினருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்து.
இதனையடுத்து, அக்குழுவைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த குற்றச் செயல்களை செய்ய பயன்படுத்திய கார் ஒன்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
தம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், குட்செட் வீதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒருவருமாக 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முறைப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, பொலிசாரால் கைப்பற்றப்பட்ட காரில் வைத்தியசாலை சேவையில் பணியாற்றுவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.