உலகக்கிண்ண 20-20 தொடரில் நேற்று (31/10/2021) முதல் போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. இதில் மொஹமட் ஷஷாட் 45(33) ஓட்டங்களையும், ஹாஸ்ரடுல்லா சசை 33(27) ஓட்டங்களையும், மொஹமட் நபி ஆட்டமிழக்காமல் 32(17) ஓட்டங்களையும், அஷ்கார் ஆப்கான் 31(23) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜான் நிக்கோல் லொப்டி – ஈட்டொன், ரூபென் ற்றுப்பிலிமன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றது.
இதில் டேவிட் விஸே 26(30) ஓட்டங்களையும், ரூபென் ற்றுப்பிலிமன் 12(9) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நவீன் உல் ஹூ 3 விக்கெட்களையும், ஹமிட் ஹசான் 3 விக்கெட்களையும், குல்பதின் நைப் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக நவீன் உல் ஹு தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாம் போட்டியாக இந்தியா மற்றும் நியூ சீலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூ சீலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களை பெற்றது.
இதில் ரவீந்திர ஜடேஜா 26(19) ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்டியா 23(24) ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல்18(16) ஓட்டங்களையும், ரோஹிட் சர்மா 14(14) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ட்ரெண்ட் போவ்ல்ட் 3 விக்கெட்களையும், ஐஸ் சோ தி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்றது.
இதில் டரில் மிட்ச்செல் 49 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக ஐஸ் சோதி தெரிவு செய்யப்பட்டார்.
இந்த தோல்வியின் மூலம் உலக கிண்ண தொடரை நடாத்தும் இந்தியா அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அணித்தெரிவும், தலைமைத்துவம் இந்தியா அணிக்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த தொடருக்கு முன்னதாகவே விராத் கோலியின் தலைமைத்துவத்தை மாற்றுமாறு சில முன்நாள் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தமை சுட்டிக்காட்ட தக்கது.
இன்று (1/11/2021) இரவு 7:30இற்கு இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. பலமான இங்கிலாந்து அணியினை வெற்றி பெறுவது இலங்கைக்கு இழலுவானதாக இருக்க போவதில்லை. ஆனால் கடந்த போட்டிகள் போன்று போராடினால் வெற்றி பெறுவது இலங்கை அணிக்கு கடினமான விடயம் அல்ல. விடும் சிறிய தவறுகளை திருத்திக்கொண்டால் இலங்கை அணி வெற்றி பெறும் வாய்ப்புகளுள்ளன.