விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 47ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (24.08) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
மெய்வல்லுனர் போட்டிகளில் மொத்தமாக 760 விளையாட்டு வீரர்கள் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியுள்ளனர். இதில் 409 ஆண்களும், 351 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன், போட்டி நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்வதற்கான அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

தேசிய விளையாட்டு பெருவிழா போட்டிகளுக்காக இந்த ஆண்டு மொத்தமாக 262 தங்கப் பதக்கங்கள், 262 வெள்ளிப் பதக்கங்கள், 360 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (23.08) நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நிகழ்வையும் ஆரம்பித்துவைத்தார்.
இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலைமையிலும் வழிகாட்டலிலும் இடம்பெற்ற தேசிய விளையாட்டுப் பெரு விழாவின் ஆரம்ப நிகழ்வில் விளையாட்டமைச்சின் செயலாளர் மகேசன், புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் (பேராசிரியர்) ஷெமல் பெர்னாண்டோ, மாகாணங்களின் விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விளையாட்டமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இது இவ்வாறிருக்க இம்முறை போட்டிகளுக்காக குறைந்தளவான நிதியே செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் போட்டிகளில் பங்கேற்ற வீர,வீராங்கனைகளுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாகவும் விளையாட்டமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆரம்ப விழாவில் விளையாட்டுச் சுடரை மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஈ.எம்.எல்.பிரியங்கர மற்றும் எம்.ஏ.எஸ்.சிவந்தி ஜயதிலக்க ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அனைத்து விளையாட்டு வீரர்கள் சார்பாக கே.ஏ.கே.லக்ரானி பெரேரா சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
காலை இடம்பெற்ற பெண்களுக்கான பத்தாயிரம் மீற்றர் ஒட்டத்தில் முதலாமிடம் – எச்.எம்.என்.ஜீ.ஹேரத் – மத்திய மாகாணம், இரண்டாமிடம் எச்.ஏ.எல். ஆரியதாஸ சப்ரகமுவ மாகாணம், மூன்றாமிடம் நிமேசா நிதர்சனி ஊவா மாகாணம் பெற்றுக் கொண்டனர்.
ஆண்களுக்கான ஐயாயிரம் மீற்றர் ஒட்டத்தில் முதலாமிடம் – டி.ஹேமன்த குமார – மேல் மாகாணம், இரண்டாமிடம் டி.எம்.டி.எஸ்.திஸாநாயக்க – வட மத்திய மாகாணம், மூன்றாமிடம் டபிள்யு.ஏ.தரிந்து தனுஸ்க – ஊவா மாகாணம் பெற்றுக் கொண்டனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் முதலாமிடம் – ஆர்.எம்.ஜே.ரணசிங்க 77.23 மீற்றர் தூரம். – மேல் மாகாணம், இரண்டாமிடம் றுமேஸ் தரங்க 76.45 மீற்றர் தூரம் – வட மத்திய மாகாணம், மூன்றாமிடம் டி.எஸ்.ரணசிங்க 71.80 – தென் மாகாணம் பெற்றுக் கொண்டனர்.
.பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் முதலாமிடம் – இ.எம்.எஸ்.உபேக்ஸா 13.05 – மேல் மாகாணம், இரண்டாமிடம் வீ.ஆர்கெமாசா குரே.- மேல் மாகாணம், மூன்றாமிடம்ஜீ..டி.எஸ்.லங்கா திலக்கா 12.43 – ஊவா மாகாணம் பெற்றுக் கொண்டனர்.
பெண்களுக்கான கோலுன்றிப் பாய்தல் போட்டியில் முதலாமிடம் – நேசராசா தக்ஸிதா 3.50 மீற்றர் தூரம் – வட மாகாணம் தேசிய விளையாட்டு விழா சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.இரண்டாமிடம் யு.ரி.விக்ரமசேகர 3.20 மீற்றர் தூரம்.- மேல் மாகாணம், மூன்றாமிடம் கே.ஏ.சி.கே.கொடித்துவக்கு 3.00 மீற்றர் தூரம் – மத்திய மாகாணம் பெற்றுக் கொண்டனர்.
பெண்களுக்கான பரிது வட்டம் போட்டியில் முதலாமிடம் – ஏ.ஜீ.வீ.வீ.லக்மாலி 44.59 மீற்றர் தூரம் – வட மத்திய மாகாணம் தேசிய விளையாட்டு விழா சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.இரண்டாமிடம் பீ.ஏ.இசாரா மதுரங்கி 42.72 மீற்றர் தூரம்.- மேல் மாகாணம், மூன்றாமிடம் ஏ.எம்.சனுக்க அத்தப்பத்து 37.33 மீற்றர் தூரம் – மேல் மாகாணம் பெற்றுக் கொண்டனர்.
பெண்களுக்கான 4 தர 100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் முதலாமிடம் – தென் மாகாணம் இரண்டாமிடம் வடமேல் மாகாணம், மூன்றாமிடம் சப்ரகமு மாகாணம் பெற்றுக் கொண்டனர்.