இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் மீது, சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் விதித்த தடையை நீக்கியுள்ளதாக கடிதம் மூலமாக அறிவித்துள்ளது. இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஆரம்பகடே G.C தேசப்ரியவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி 21 ஆம் திகதி இலங்கை காற்பந்து சம்மேளனத்தை சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் தடை செய்திருந்தது.
2022 ஆம் ஆண்டு 22 ஆம் திகதி சர்வதேச காற்பந்து சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆயுட்காலம் 04 வருடங்களாக அமைய வேண்டும். தேசிய விளையாட்டு சட்ட திட்டங்களில் இதற்கு எழுத்துமூலமான உத்தியோகபூர்வ விதி விலக்கு வழங்கப்படவேண்டும்.
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் சகல காற்பந்து தினசரி நடவடிக்கைகளும் பொறுப்பு கூறலுக்கு மற்றும் நடவடிக்கைக்குளுக்கான பொறுப்பை கொண்டுள்ளது. ஜனவரி 14 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் மற்றும் நிர்வாக குழு சர்வதேச மற்றும் ஆசிய காற்பந்து சம்மேளனங்களினால் ஏற்றுக்கொள்ளப்படாமையினால் புதிய நிறைவேற்றுக் குழு நியமிக்கப்படவேண்டும் போன்ற நிபந்தனைகள் சர்வதேசக் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் விதிக்கப்பட்ட நிலையில் அவை பூர்த்தி செய்யப்பட்டதனை தொடர்ந்து இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
விசேட பொதுக்கூட்டம் கடந்த 14 ஆம் திகதி நடாத்தப்பட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மூலம் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தேர்தல் நடாத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கருத்திற் கொண்டும், தேர்தலுக்கான குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த தடையினை நீக்க சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் முடிவெடுத்துள்ளது. தேர்தல் நடைபெறும் வரை சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் உன்னிப்பாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நடவடிக்கைகளை அவதானிக்குமென தெரிவித்துள்ளது.
இந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை சர்வதேச ரீதியிலான காற்பந்தாட்ட போட்டிகளில் பங்கு பற்ற முடியும். தற்போது இடைக்கால நிர்வாகத்தின் கீழ் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் இயங்கு நிலையில் காணப்படுகிறது.