ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், கட்சியின் உறுப்புரிமையும் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்து கடிதம் ஒன்றும் தயாசிறி ஜயசேகரவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜயசேகரவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை செப்டெம்பர் 05ம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாகவும், அவர் கட்சியின் பொதுச் செயலாளராக இனியும் செயற்பட முடியாது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜயசேகரவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை கட்சியின் அரசியலமைப்பு விதிகளின்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் எழுத்து மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, ஜயசேகரவுக்குப் பதிலாக நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஜனவரி மாதம், கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்தை தொடர்ந்து ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.