கொழும்பு ரயில் நிலையத்தில் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் மற்ற ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்புப் படைகளை அனுப்ப தயாராக இருப்பதாகவும்  திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியில் கடமையாற்றும் நிலைய அதிபர்கள் மற்றும் இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஐந்து வருடங்களாக காலதாமதமாக உள்ளதாக கூறப்படும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் திருத்தங்கள் மற்றும் பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் கடந்த (11.09) திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.

இதன்காரணமாக பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இயக்கப்பட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version