வவுனியா – கருப்பனிச்சாங்குளம் பகுதியில் உள்ள மக்களின் காணியை சிங்கள மக்களுக்கு மயானம் அமைப்பதற்கு வழங்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்று (15.09) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைப்பதற்கு இரு பிக்குகளின் தலைமையில் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த நிலத்தை அளவீடு செய்ய நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்திருந்த நிலையில், மக்களின் தலையீட்டை அடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
குறித்த காணியானது தமிழர்கள் வசித்து வந்த பகுதியில் அமைந்துள்ளது எனவும், யுத்தத்திற்கு முந்தைய காலப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக அங்கு பயிர் செய்து வந்ததாகவும், யுத்தக்காலப்பகுதியில் அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு மீள் குடியேறி விவசாயம் செய்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சிங்கள மக்கள் தங்களுடைய மூதாதையர்கள் குறித்த காணியில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறுவதாக தெரிவித்துள்ள மக்கள் இந்த காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
சிங்களவர்களின் சடலங்களை புதைக்க அருகில் இரு மயானங்கள் உள்ளதாக குறிப்பிடும் மக்கள் பிரதேச சபை இந்த நிலத்திற்கான உறுதி பத்திரத்தை வழங்காமல் முடக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதேச செயலாளர் நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளமாறு இருதரப்புக்கும் வலியுறுத்தியுள்ளார். அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்துள்ளார்.