நாடாளுமன்றம் ஜனாதிபதி செயலகத்திற்கு கட்டுப்பட்டு நடக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து இன்று (21.09) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் தலையிட ஜனாதிபதி செயலகத்துக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இரகசிய தகவல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சாட்சியங்கள் அனைத்தும் திறந்த விசாரணை குழுவிலே தெரிவிக்கப்பட்டன. அப்படியானால் அந்த சாட்சியங்கள் எவ்வாறு இரகசியமான தகவல் என தெரிவிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆகவே நாடாளுமன்றம் ஜனாதிபதி செயலகத்துக்கு அடிபணிந்து செயற்படக்கூடாது என வலியுறுத்திய அவர், நாடாளுமன்றம் கெளரவத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.