ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் (Kristalina Georgieva) இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐ. நா சபையின் தலைமையகத்தில் நேற்று (20.09) இடம்பெற்றது.
இலங்கையின் நிதித்துறை சீ்ர்த்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கையில் பணவீக்கத்தைக் குறைத்ததுடன், நாட்டில் வர்த்தகத்திற்கு பொருத்தமான சூழலை உருவாக்கியமை மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடி, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி மொஹான் பீரிஸ் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.