அமைச்சர் அலி சப்ரியின் மகன் ஐ.நா சபை கூட்டத்துக்கு ஏன் போனார்?

நீதி அமைச்சர் அலி சப்ரியின் மகன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரின் அணு ஆயுத தடை தொடர்பிலான கூட்டத் தொடரில் கலந்து கொண்டது தொடர்பில் சமூக வலைத்தளதில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அமைச்சர்கள் அற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா கூட்டத் தொடரில் கலந்து கொண்டமை தொடர்பில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலில் தனது மகன் ஏன் தன்னுடன் கலந்து கொண்டார் என அமைச்சர் அலி சப்ரி ட்விட்டர் மூலமாக விளக்கமளித்துள்ளார். “ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சராக ஜனாதிபதிக்கு உதவி செய்யவே சென்றிருந்தேன். அங்கு பல கூட்டங்கள், உரைகள், மூன்று பொது நிகழ்வுகள், பல்வேறுவிதமான இருதரப்பு, பலதரப்பு சந்திப்புகள் என்று எனது முழுமையான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அட்டவணைகளை நான் வைத்துள்ளேன். பல எழுத்து வேலைகள், தயார்ப்படுத்தல்கள் காணப்பட்டன. அமைச்சர்களுக்கு தேவையானவற்றை செய்ய அமைச்சில் ஊழியர்கள் உள்ளனர். அதே போன்று தன்னார்வ தொண்டர்களும் உள்ளனர்.

எனது மகன் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றார். எனது இந்த பயணத்தின் போது எனது வேண்டுகோளுக்கிணங்க அவர் ஆராய்ச்சி உதவியாளராகவும், வரைபு எழுத்தாளராகவும் செயற்பாட்டார். தனது அனுபவத்தையும், சிறப்பு தகமையையும் தந்து உதவினார். இதற்காக அரசாங்கத்துக்கு 1 ரூபாய் கூட செல்வாகவில்லை. வரிப்பணத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை” என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பதில் சொல்லும் கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது. அதற்கு பதில் சொல்லும் கடப்பாடு எனக்கு இருக்கிறது. அதனால் இந்த உண்மையை உங்களுக்கு நான் தந்துள்ளேன் என மேலும் அவர் கூறியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் தனது மகனுடன் கலந்து கொண்ட புகைப்படத்தை அமைச்சர் அலி சப்ரியே தனது ட்விட்டரில் பதிவேற்றியிருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version