சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை

2020 ஆம் செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் திலீபினின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியமை மற்றும் கலந்து கொண்டமை ஆகிய குற்றங்களுக்காக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான வேளையில் அவரின் உடல் நிலையை கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இந்த வழக்கிற்கு அவர் சமூகமளிக்காத நிலையில் அவரை கைது செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் சட்டத்தரணிகள் ஊடாக சிவாஜிலிங்கம் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் போது அவருக்கு இரண்டு 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சுகயீனம் காரணமாக இந்தியாவில் சிகிச்சைகள் பெற்று வந்தமையினால் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை என சிவாஜிலிங்கம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

2011.08.29 ஆம் திகதி அரசியலமைப்பின் 44(2)வது சரத்து மற்றும் 27வது பிரிவின் பிரகாரம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்ட உத்தரவை மீறியமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version