தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமானளவு மழைவீழ்ச்சியும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவு மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது.
இச்சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் சீரற்ற வானிலையின் காரணமாக இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தொடர்ந்து வட மாகாணம் முழுவதும் வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்களது தொழில் வாய்ப்புக்களையும் இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
