இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன தேர்தல் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பல அணிகள் போட்டியிடுகின்ற போதும், முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமரின் தலைமையில் போட்டியிடும் குழு மற்றும் அனுராதபுர காற்பந்தாட்ட சம்மேளன தலைவர் திலங்க தக்ஷித தலைமையில் போட்டியிடும் குழு ஆகியவற்றுக்கிடையில் கடும் போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் மஜீத் தலைமையிலான மூவர் அடங்கிய குழு இந்த தேர்தலை நடத்தவுள்ளது. சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிய காற்பந்து சம்மேளன பிரதிநிதிகள் இந்த தேர்தலில் கண்காணிப்பாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். ஏற்கனவே அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை பூராகவுமுள்ள 67 சங்கங்கள் இந்த தேர்தலில் இரகசிய வாக்களிப்பில் ஈடுபடுவார்கள். வாக்களிப்புக்கு நிகழ்வுக்கு ஒரு சங்கதிலிருந்து மூவர் என்ற அடிப்படையில் கலந்து கொள்வார்கள். காற்பந்து சம்மேளனத்தின் இடைக்கால தலைவர் தேசப்பிரய சங்கங்களின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தை ஆரம்பித்து வைப்பார். தேர்தல் நிறைவடைந்ததும் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்ததும் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
