நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் நீதியான விசாரணை அவசியம் என நீதி அமைச்சிடம் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் கோரிக்கை முவைத்துளளார்.
உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகத் தான் வகித்து வந்த நீதிபதிப் பதவி மற்றும் பொறுப்புக்கள் அனைத்தையும் விட்டு விலகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தெரிவித்துள்ள பின்புலத்தில் இதுதொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
“குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் வழங்கப்பட்ட கட்டளைகள் காரணமாக உயிர் அச்சுறுத்தலையும், தொடர்ச்சியான அழுத்தங்களையும் எதிர்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அத்துடன், அவர் தற்போது நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். இந்த விடயம் எமது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள இழுக்காகும். அவருக்கு அவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தவர்கள் மற்றும் அவரின் வெளியேற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நீதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.
அதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டுமென நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கிறேன். நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் நாட்டில் வாழ்வதற்கான சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதால் இதுதொடர்பில் உடனடி விசாரணைகளுக்கு பணிக்க வேண்டும்.
இந்த விடயத்தை உரிய தரப்பினர் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல எதிர்பார்த்துள்ளேன்“ எனவும் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.