தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது.

இலங்கைக் கடற்பரப்பில் 2 படகுகளுடன் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று (14/10)சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை க்கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த மீனவர்கள் நேற்றையதினம் 2 டோலர் படகுகளுடன்இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் மாலை வேளையில் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு, இன்று மலேரியா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு கடற்படையின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் அனைத்து மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply