மதுரங்குளியில் பகுதியில் ATM இயந்திரத்தில் பணத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ம் திகதி புத்தளம் – மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் முகங்களை மறைத்து ATM இயந்திரம் இருக்கும் இடத்திற்குள் செல்வது அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும், தானியங்கி இயந்திரம் பழுது பார்க்க வந்ததாக கூறி, எவ்விதமான பதற்றமுமின்றி, திறப்பு ஒன்றின் மூலம் தானியங்கி இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து பணம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள்ளே சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இவர்கள் வங்கியுடன் தொடர்புடைய ஒரு சிலரின் உதவியுடன் இந்த கொள்ளைச் சம்பவத்தை முன்னெடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில் தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் கைது செய்து விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர்.