கிளிநொச்சியில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் இன்று(18.10) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தில், கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சு.ஜெயனந்தராசா தலைமையில் காலை 10.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டு குறித்த உதவித் திட்டங்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட ஏழு குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு குறித்த வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் தையல், சிறு‌கைத்தொழில், உணவுப்பொருள் உற்பத்தி, தோட்டம், சிறுகடை, கோழி வளர்ப்பு ஆகிய வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், இந் நிகழ்வில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஆறு பயனாளிகளுக்கும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தலா ஒவ்வொரு பயனாளிகளுக்குமாக மொத்தமாக 15 பயனாளிகளுக்கு குறித்த உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், வடமாகாண வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்கள், வடமாகாண சமூகசேவைத் திணக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version