புல்லறுத்தான் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி மன்னாரில் போராட்டம்!

நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரையை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்றைய தினம் (26-10)காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்( மெசிடோ )அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிஹிராடோ,நானாட்டான்,முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார், பொது மக்கள் எனப் பலரும் குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

மேற்படி மேய்ச்சல் நில விடுவிப்புத் தொடர்பாக எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்று போனதன் காரணத்தால் குறித்த போராட்டம் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகப் பதாதைகளை ஏந்தியவண்ணம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கால்நடை வளர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு இலுப்பைக்கடவைப் பகுதிக்கு எமது கால்நடைகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மற்றும் மனித இழப்புக்களையும் சந்திக்க நேருவதுடன் பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திக்கின்றோம், மேலும் அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுகின்றன எனக்கூறினர்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேச்சல் நிலமாகப் பிரகடனப்படுத்த வேண்டுமெனப் பலவருடகாலமாகக் கோரிக்கை விடுத்திருந்தும்,பலமுறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் அதை நடைமுறைப்படுத்தவில்லை 12-10-2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லையென்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் மேச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கின்றார்கள் என்பது வெளிப்படையாகவே புலனாகின்றது என்றும் கருத்துத் தெரிவித்தனர்.உடனடியாக மேச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு குறிப்பிட்டு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் ஒன்றும் வாசித்து கையளிக்கப்பட்டது.

புல்லறுத்தான் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி மன்னாரில் போராட்டம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version