தங்களுக்கு புரியாத மொழிகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் செய்து, நுண் கடன் பொறிகளில் தம்மை சிக்க வைப்பதாக முறைப்பாடு செய்து, பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னியாளத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
வாழ்க்கைச் சுமையால் வாடும் அப்பாவி பழங்குடி சமூகம் இந்த நுண்நிதிக் கடன்களைப் பெற்றுள்ளதாகக் கூறும் பழங்குடியினத் தலைவர், அவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான ஆதிவாசிகளுக்கு சிங்களம், தமிழும் கூட படிக்கத் தெரியாத நிலையில், நுண் கடன் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடன்பட்ட ஆதிவாசிப் பெண்கள் பாலியல் லஞ்சம் கூட கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், இது மிகவும், பாரதூரமான சிக்கல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நுண்நிதி கடன் வலையில் பழங்குடியின மக்களும் ஏனைய அப்பாவி ஏழை மக்களும் சிக்கியுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கியினால் உருவாக்கப்பட்டுள்ள உத்தேச கடன் ஒழுங்குமுறை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் ஏற்று நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உரிமம் பெற்ற நிகர நிதி நிறுவனங்களாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களை சட்டத்தின் கீழ் அல்லது நிறுவன சட்டம் போன்ற வேறு எந்த சட்டத்தின் கீழும் கொண்டு வருவதற்கான அவசர வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறு பழங்குடி தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளர்.