மன்னாரில் 40 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளுடன் விற்பனை முகவர் கைது!

மன்னாரில் நீண்ட காலமாக போதைபொருள் விற்பனையில் ஈட்பட்டு வந்த நபர் மற்றும் அவரிடமிருந்து போதை பொருள் கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 21 கிராம்,9 மில்லி கிராம்,ஐஸ் போதை பொருள், 50,000 ரூபாய் பணம், மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் என்பன இன்று (06.11), திங்கட்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

மன்னார், புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி, தாராபுரம், உட்பட்ட பல பகுதிகளில் நீண்டகாலமாகப் போதை பொருள் விற்பனையாளராகவும், விற்பனை முகவராகவும் செயற்பட்டு வந்த குறித்த நபர், மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி விபூர்த்திக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத்தின் ஆலோசனையின் பெயரில் குற்றப்புலனாய்வு பிரிவு சார்ஜன் ரத்ணமனல,தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் போதைப் பொருளைக் கொள்வனவு செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் புதுக்குடியிருப்புப் பகுதியை சேர்ந்த 31, மற்றும் 20 வயதுடைய நபர்கள் என்பதுடன் புதுகுடியிருப்பு பாடசாலைக்கு அருகில் விற்பனை நடடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் பிரதான சந்தேக நபருக்கு 1 கிலோ ஐஸ் போதைப் பொருள் விற்பனைக்காக வந்த நிலையில் 21 கிராம் போதை பொருளே தற்போது கைப்பற்றப்பட்டுள்ளமையால்,மிகுதி போதைப் பொருளைத் தேடும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version