குருபெயர்ச்சி பலன்கள் 2021

வியாழ மாற்றம் என சொல்லப்படும் குருபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாகாந்தின் படி 20 ஆம் திகதி நடைபெறுகிறது. ராசி மண்டலத்துக்கு அதிபதியான குரு பகவான் ராசிகளை ஆட்சி செய்வதனால் குருபெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒரு வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் வியாழ மாற்றத்தின் பலன்கள் ராசிகளுக்கு எவ்வாறு அமையவுள்ளன என்ற பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே உள்ளன.

மேஷம்

ராசிக்கு 7 – ம் வீடான துலாமை குரு பகவான் பார்ப்பதால் மனதில் இருந்த சிக்கல்கள் சோர்வு முதலியன முடிவுக்கு வரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். செயல்களையும் விரைந்துமுடிப்பீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு.

எப்போதும் எதிலும் முதன்மை இடமே பெற விரும்பும் மேஷ ராசி அன்பர்களே… இதுவரை உங்கள் பத்தாம் வீடான மகரத்தில் அமர்ந்து பல சங்கடங்களைத் தந்துகொண்டிருந்த குருபகவான் இப்போது பதினொன்றாம் இடமான கும்பத்தில் அடியெடுத்து வைக்கிறார். இது மிகவும் யோகமான அமைப்பாகப் பார்க்கப்படுகிறது.

13.11.2021 அன்றுமுதல் குருபகவான் கும்பராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். கும்பராசி என்பது தங்கள் ராசிக்கு லாபஸ்தானம் ஆகும். எந்த கிரகமும் 11 ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போது நற்பலன்களையே தரும். அதிலும் சுபகிரகமான குருபகவான் 11 ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது மிகவும் விசேஷமான அமைப்பாகும்.

குருப்பெயர்ச்சி
தசம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் செயல்கள் அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார். வேலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கேற்ற பலன் இல்லாமல் திண்டாடினீர்கள். தேவையற்ற அவச்சொல்லுக்கும் ஆளானீர்கள். அந்த நிலை இப்போது மாறும்.

இனி உங்களை நீங்களே மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். உங்களுக்குள் மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புகழின் வெளிச்சம் இல்லாமல் பதுங்கியிருந்த நீங்கள் தற்போது அனைவரின் கவனத்துக்கும் வருவீர்கள். தேவையான பணத்தைக் கூடப் புரட்டமுடியாமல் திண்டாடினீர்களே, இனி அந்தத் தடைகள் எல்லாம் அகலும். படிப்படியாகக் கடன்களை அடைப்பீர்கள். வி.ஐ.பிக்களின் அறிமுகம் கிடைக்கும். அதன் மூலம் சில காரியங்களில் ஆதாயம் உண்டாகும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் இருந்துவந்ததே அந்த நிலை இனி மாறும். குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். தங்கையின் திருமணத்தை முடிக்க முயன்று பல தடங்கல்களை சந்தித்தீர்களே… அந்தத் தடங்கல்கள் எல்லாம் விலகும். நல்ல இடத்தில் வரன் அமையும்.

குருபகவான் பார்வை பலன்கள்:
குருபகவான் கும்பராசியில் அமர்ந்து 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். அதாவது உங்களின் மூன்றாம் வீடான மிதுனத்தையும், சிம்மத்தையும் துலாம் ராசியையும் பார்க்கிறார். குருபகவானின் மூன்றாம் பார்வையால் சகோதர வகையில் குறிப்பாக இளைய சகோதர வகையில் இருந்துவந்த பிரச்னைகள் அனைத்தும் விலகும். குடும்பத்துக்குத் தேவையான மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களின் பெயர், புகழ் ஆகியன வீட்டிலும் வெளியிடும் அதிகரிக்கும்.

குருபகவான் சிம்மராசியைப் பார்ப்பது மிகவும் நல்ல அமைப்பாகும். குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்குக் கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே காதல் பெருகும். இல்லறம் நல்லறமாகும். குழந்தைச் செல்வத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மேஷராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பதிலைத் தரும். வாரிசு உருவாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். தந்தைவழி சொத்துகளில் இருந்த குழப்பங்கள் வில்லங்கங்கள் தீரும்.

ராசிக்கு 7 – ம் வீடான துலாமை குரு பகவான் பார்ப்பதால் மனதில் இருந்த சிக்கல்கள் சோர்வு முதலியன முடிவுக்கு வரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். செயல்களையும் விரைந்துமுடிப்பீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு.

நட்சத்திர சஞ்சார பலன்கள்:
அவிட்ட நட்சத்திரத்தில் குருவின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். அவிட்டம், உங்கள் ராசி அதிபதியான செவ்வாயின் நட்சத்திரம். எனவே எடுத்த காரியங்களில் வெற்றிகிடைக்கும். போட்டிகளில் வெற்றிவாகை சூடுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள்.

பேச்சில் ஒருவிதத் தெளிவும் தீர்க்கமும் உண்டாகும். சொந்த வீடு அல்லது மனை வாங்க விரும்பியவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் கனிந்துவரும். இருக்கும் பிதிர்ராஜ்ஜிய சொத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டுப் புதிய சொத்தை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். தொல்லைதந்த பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வழக்குகளில் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். அன்புக்குரிய தாயாரின் உடல் நலனின் இருந்த குறைபாடுகள் நீங்கி நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.

சதய நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்:

31.12.2021 முதல் 2.3.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சதயம் ராகு பகவானின் நட்சத்திரம். எனவே இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுட்துப் போவது நல்லது. குடும்பத்தில் பொறுமையைக் கையாள்வது அவசியம். தேவையற்ற சந்தேகம், ஈகோ பிரச்னைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். ஒற்றுமையாக வாழ்ந்தால் மகிழ்ச்சி என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம் இது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்:

2.3.2022 முதல் 13.4.2022 வரை குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியிலே சஞ்சாரம் செய்ய இருக்கிறார். எனவே நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். இதுவரை தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண வயதில் இருக்கும் மகன் அல்லது மகளுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். நல்ல வரன் அமையும். புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். இதுவரை சென்று தரிசனம் செய்ய விரும்பித் தட்டிக்கொண்டேபோன புனிதத் தல யாத்திரை இப்போது கைகூடும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி இதுவரை தடுமாற்றதோடு இருந்த உங்களைத் தாங்கிப் பிடித்து வெற்றிப்பாதையில் நடத்தும்.

வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

ரிஷபம்

துணிந்த செயலும் தெளிந்த அறிவும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களுக்கு!

2021 நவம்பர் மாதம் 13 ம் தேதி குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 13 வரை கும்பராசியிலேயே சஞ்சரிக்க இருக்கிறார். கும்ப ராசி என்பது ரிஷப ராசிக்கு தசம ஸ்தானமாகும். பத்தில் குரு பதவியைப் பறிப்பார் என்பது ஜோதிட மொழி. எனவே இது குறித்த கவலையில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் கவலைப் படத் தேவையில்லை. காரணம் குருவின் ஸ்தான பலத்தைவிடப் பார்வைபலம் தரும் பலன்கள் மிகுதி. எனவே ரிஷப ராசிக்காரர்கள் தேவையற்ற பயங்களை விட்டுவிடுவது நல்லது. மேலும் குருபகவானின் நட்சத்திர சஞ்சாரமும் இந்த குருப்பெயர்ச்சியில் மிகவும் அனுகூலமான பலன்களை உங்களுக்கு வழங்க இருக்கிறது. இது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

குருபகவான் பார்வை பலன்கள்
குருபகவான் கும்ப ராசியில் அமர்ந்து 5,7,9 ஆகிய வீடுகளாக மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய வீடுகளைப் பார்க்க இருக்கிறார். அதன்படி உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்குஸ்தானமான இரண்டாம் வீடு மிதுனத்தை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். இதுவரை இருந்துவந்த மன வருத்தங்கள் விலகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். அவர் மகிழ்ந்து ஆசிவழங்குவார்.

உங்கள் வாக்குஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் பேச்சில் இனிமை பிறக்கும். அனுபவம் பளிச்சிடும். நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதுடன் கொடுத்து வராது என்று நினைத்த கடனும் திரும்பக்கிடைக்கும்.

குருபகவான் பார்வை உங்கள் சுக வீட்டின் மீது விழுவதால் புதிய வீடுகட்ட, நிலம் வாங்கக் கேட்டிருந்த கடன் உதவி கிடைக்கும். குருபகவானின் பார்வை ஆறாம் வீட்டில் படுவதால் பழைய கடன்களை அடைப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவான்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை குருபகவான் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் மன வலிமை அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பும் அந்நியோன்யமும் அதிகரிகும். உறவினர்கள் உதவு கிடைக்கும். தந்தைவழியில் இருந்த சொத்து சிக்கல்கள் பேச்சு வார்த்தையின் மூலம் சீராகும்.

திருமணம் தடைப்பட்டுக்கொண்டிருந்ததே இளைஞர்களுக்கு விரைவில் திருமண யோகம் அமையும். கனவுத் தொல்லைகள் இல்லாத அமைதியான உறக்கம் வாய்க்கும். சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

சதய நட்சத்திரத்தில் குருபகவான்:

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் ராகு பகவானுக்குரிய சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகவும் யோகமான அமைப்பாகும். உங்கள் வலிமை அதிகரிக்கும். எதிரிகள் வீழ்வார்கள். ஷேர் மார்கெட்டில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் வாய்க்கும். குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்தியும் விரிபடுத்தியும் பார்ப்பீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான்:

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் திண்டாடுவீர்கள். திடீர் செலவுகள் ஏற்படும். புதிய பொறுப்புகளை பதவிகளை ஏற்கும் அதில் சிறப்பாகச் செயல்பட முடியுமா என்பதை யோசித்து ஏற்றுக்கொள்ளுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அன்புத்தொல்லை இருக்கும். வீண்பழியும் அவச்சொல்லும் சிலருக்கு ஏற்படலாம்.

வழிபட வேண்டிய இறைவன்: தட்சிணாமூர்த்தி

மிதுனம்

எதற்கும் மனம் தளராமல் எடுத்த காரியத்தை சிறப்பாக முடியும் மிதுனராசி அன்பர்களே!

தொட்டதில் எல்லாம் தாமதம். பணவரவில் பிரச்னை. வேலை செய்யும் இடத்திலும் நிறைய தொந்தரவுகள் என்று பல்வேறு சிக்கல்களில் சிக்கி கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்காதா என்று காத்திருக்கும் மிதுனராசிக்காரர்களுக்கு அற்புதமான ஒரு காலகட்டமாக அமைகிறது இந்த குருப்பெயர்ச்சி காலகட்டம்.

குருபகவான் இதுவரை உங்களின் எட்டாம் இடத்தில் இருந்த குருபகவான் 13.11.2021 அன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான கும்பத்தில் அடியெடுத்துவைக்கிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். அந்த அளவுக்கு இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கப் போகிறது.

இனி உங்கள் வாழ்வில் அனைத்தும் மாறும். சோர்வாக இருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். நம்பிக்கை இழந்தும் காணப்பட்ட நீங்கள் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களின் பாக்கியஸ்தானமான கும்பராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் போது எல்லா வகையிலும் உங்கள் நலனை உறுதி செய்வதாகவே இருக்கும்.

உங்களுக்கு குருவின் ஸ்தான பலத்தைப்போலவே பார்வை பலமும் அனுகூலமாகும். குருபகவான் 5 ம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். இது மிகவும் நல்ல விஷயம். எப்போதும் புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். இதுவரை நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் பயன் இல்லை என்று புலம்புவீர்களே… இனி அவை அனைத்துக்கும் சேர்த்துப் பலன் வந்து சேரும். வருமானத்தில் கொஞ்சம் சேமிக்கவும் முடியும்.

குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் பிரச்னைகள் தீரும். மனம இலகுவாகும். கலகலப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். அதேபோன்று குருபகவானின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். செயல்களில் இருந்த தடங்கல்கள் விலகும். வெற்றிகள் குவியும். புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டுவந்த குலதெய்வப் பிராத்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். மகான்களின் சந்நிதானங்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். அவர்களின் ஆசி கிட்டும். நண்பர்கள் உதவுவார்கள்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவான்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டங்களில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் இதுவரை இருந்த சின்னச் சின்னப் பிரச்னைகள் நீங்கும். இந்தக் காலகட்டத்தில் செயல்படும்போது கொஞ்சம் நிதானம் தேவை. பயணத்தின் போது கவனம் தேவை. புதிய வீடுமனை வாங்கும்போது மூலப்பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். சகோதர வகையில் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. யாரோடும் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

சதய நட்சத்திரத்தில் குருபகவான்:

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள், தேவையற்ற பதற்றம், டென்ஷன் வந்து செல்லும். சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் கவனம் தேவை. வீட்டிலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களிடம் கடுமை காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான்:

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டியது அவசியம். வீண் கவலைகளைத் தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற விஷயங்களை வீட்டிலும் வெளியிலும் பேச வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் ஏற்படலாம். எதற்கெடுத்தாலும் உறவுகளோடு சண்டைக்கு நிற்காதீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சங்கடங்களிலிருந்து உங்களை மீட்பதாகவும் எதிர்காலத்தில் நிலை நிறுத்த உதவுவதாகவும் அமையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விருத்தகிரீஸ்வரர்

கடகம்

கலை உணர்வும் கற்பனைத் திறனும் கொண்ட கடக ராசி அன்பர்களே,

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த குருபகவான் இப்போது மறைவு ஸ்தானமான எட்டாம் இடம் சென்று மறைகிறார். பொதுவாக பூரண சுபரான குருபகவான் மறைவு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது நற்பலன்களைத் தராது என்றாலும் சர ராசிக்காரரான உங்களுக்கு ஸ்திர வீட்டில் குருபகவான் மறைவது நற்பலன்களையே தரும் என்று சொல்லலாம்.

13.11.2021 முதல் 13.4.2022 வரை கும்பராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் உங்கள் ராசிக்கு 2 -ம் வீடான சிம்மத்தைப் பார்ப்பது மிகவும் நல்ல அமைப்பாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல சூழ்நிலை வாய்க்கும். இதுவரை குடும்பத்திலிருந்துவந்த வருத்தங்கள் நீங்கும். வீண் சந்தேகம், சங்கடங்கள், சண்டை சச்சரவுகள் அகலும்.

குருபகவான்
பணவரவு தாராளமாகும். இதுவரை என்ன உழைத்தாலும் சேமிக்க முடியாமல் திண்டாடினீர்களே இனி அந்த நிலைமை மாறும். சேமிக்கவும் செய்வீர்கள். பொருள் சேர்க்க நிகழும். மனதில் அமைதி குடிகொள்ளும். உறக்கம் வராமல் தவித்தவர்களுக்கு நல்ல உறக்கம் வரும். ஆரோக்கியமும் மேம்படும்.

குருபகவான் உங்களின் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் வந்து விலகும். பழைய வாகனத்தை மாற்ற சந்தர்ப்பம் கூடிவரும். பிடித்தமான மாடலில் புதுவாகனம் வாங்குவீர்கள். உற்சாகம் இழந்து காணப்பட்ட அரசியல்வாதிகள் உற்சாகமாக வலம் வருவார்கள்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

குருபகவான் செவ்வாய்க்கு உரிய அவிட்ட நட்சத்திரத்தில் 13.11.2021 முதல் 30.12.2021 வரை சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு நற்பலன்கள் மிகுதியாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். புதிய பொறுப்புகள் தேடிவரும். வீட்டில் இதுவரை நடைபெறாமல் தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகளை நடத்திப்பார்ப்பீர்கள். உங்களின் சொந்த வீட்டுக் கனவு நனவாகும்.

சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்

குருபகவான் சதய நட்சத்திரத்தில் 31.12.2021 முதல் 02.03.2022 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணப்பற்றக்குறையால் தடைப்பட்டிருந்த வீட்டின் கட்டடப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எதைச் செய்தாலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே செய்யுங்கள். இல்லை என்றால் வழக்கு, அபராதம் என்று செலுத்த வேண்டியிருக்கும்.

குருபகவானின் பூரட்டாதி நட்சத்திர சஞ்சாரம்

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 02.03.2022 முதல் 13.04.2022 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது உங்களுக்கு மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும். இதுவரை சமூகத்தில் மதிப்பை இழந்து இருந்த உங்களுக்கு நன் மதிப்பு உருவாகும். வீட்டிலும் வெளியிலும் நற்பெயர் கிடைக்கும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அதிகரிக்கும். குழந்தைச்செல்வம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல குழந்தைப் பேறு வாய்க்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மரியாதையைப் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
மொத்தத்தில் இந்தக் காலகட்டம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றிப்படிகளில் உங்களை ஏறச் செய்யும் என்று உறுதியாகச் சொல்லலாம். துணிவுடன் செயல்பட்டு வெற்றி காண வேண்டிய குருபெயர்ச்சி காலகட்டம் இது.

வழிபட வேண்டிய இறைவன்: ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர்

சிம்மம்

குருபகவான் ஆண்டுக்கொருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சாரம் செய்வார். இதையே குருப்பெயர்ச்சி என்கிறோம். 13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசி என்பது சிம்மத்துக்கு ஏழாம் இடம் . பொதுவாக ஏழாம் இடத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களையே கொடுக்கும். அந்த வகையில் இந்தப் பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்களை சிம்ம ராசிக்காரர்களுக்கு வழங்க இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வோம்.

குருப்பெயர்ச்சி
வியாபாரம் :

இதுவரை தொழிலில் நஷ்டம் இல்லை என்றாலும் லாபம் காணவிடாமல் இருந்த நிலை இப்போது மாறும். லாபம் அதிகரிக்கும். புதிய உற்சாகத்துடன் தொழில் செய்வீர்கள். உங்களின் அனுபவமும் உழைப்பும் அதற்கான பலனைக் கொடுக்கும். இந்தக் காலகட்டத்தில் தொழிலை விரிவுபடுத்தக் கேட்டிருந்த வங்கிக் கடனுதவிகள் கிடைக்கும். புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவீர்கள். ரியல் எஸ்டேட், உணவு சம்பந்தமான தொழில்கள் மற்றும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் செய்பவர்கள் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். பங்குதாரர்கள் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டிய உரிமம் அனுமதி ஆகியன கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் : கடுமையான உழைப்பைச் செலுத்தியும் செய்யும் வேலையில் கெட்ட பெயர்தான் மிஞ்சியதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலகட்டம் மிகுந்த நற்பலன்களை வழங்க இருக்கிறது. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மேலதிகாரிகள் உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். அவர்களால் நன்மை உண்டாகும். பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். மேல் நாடுகளிலிருந்து வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பழையபடி அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

கலைஞர்கள் : இதுவரை உங்களின் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காமல் வருந்திய கலைஞர்களுக்கு உரிய சந்தர்ப்பம் வாய்க்கும். பெரிய நிறுவனங்கள் உங்களுக்குரிய வாய்ப்புகளைக் கொடுக்கும். அரசின் கௌரவமும் விருதுகளும் கிடைக்க வாய்ப்புண்டு.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி வளமான வாழ்வுக்கு அடித்தளம் இடும் காலகட்டமாகவும் மன அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: புற்று நோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

கன்னி

கலைமனமும் கலங்காத குணமும் உடைய கன்னிராசி அன்பர்களே

13.11.2021 அன்று குருபகவான் மகரத்தில் இருந்து கும்பத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதுவரை உங்களின் ஐந்தாம் வீட்டில் இருந்து நற்பலன்களை வழங்கிவந்ததோடு பார்வை பலமும் பெற்றிருந்தீர்கள். ஆனால் இப்போது சஷ்டம ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறதோ என்று கவலைப்படும் கன்னி ராசி அன்பர்களே… குருபகவான் இந்தப் பெயர்ச்சியிலும் உங்களுக்குத் தன் பார்வையால் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளித்தர இருக்கிறார் என்பதை அறிந்து சந்தோஷப்படுங்கள்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
2 – ம் இடமான துலாத்தில் குருபகவானின் பார்வை விழுகிறது. இது தங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்குஸ்தானமாகும். எனவே உங்கள் தனலாபம் அதிகரிக்க இருக்கிறது. பொருளாதார வரவில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்ததைவிட அதிகப் பணவரவு உண்டாகும். அதற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீர்ந்து இல்லறம் நல்லறமாகும். குருபகவான் மிதுனத்தைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். பதவியுயர்வு தேடிவரும். பணவரவும் அதிகரிக்கும். உங்களின் விரையஸ்தானமான சிம்மராசியை குருபகவான் பார்ப்பதால் வீண் செலவுகளை எல்லாம் கட்டுப்படுத்துவார். மகன் கல்விக்காகச் செலவு செய்வீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விட்டுப்போன பணிகளை எடுத்துச் செய்யும் நிலை வரும்.

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் செவ்வாய் பகவானின் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற கோபம், செலவு ஆகியன ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் உண்டாகி நீங்கும். உடல் ஆரோகியத்திலும் அக்கறை செலுத்துங்கள். முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். பயணத்தின் போதும் உரிய கவனம் தேவை.

சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரை யிலான காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பரம்பரை சொத்தை விற்கும் நிலை ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் நடவடிக்கையில் கவனம் செலுத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் சண்டைக்குச் செல்லாதீர்கள். குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். காதுபடவே சிலர் உங்களைக் குறித்து அவதூறு பேசுவார்கள். அதை எல்லாம் கண்டும் காணாமலும் விடுங்கள். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்க வேண்டாம். பணியிடத்தில் இடமாற்றம் இருந்துகொண்டேயிருக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை அலைகழித்தாலும் மறைமுக வெற்றியையும் பல முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.

வணங்கவேண்டிய தெய்வம்: நடராஜப்பெருமான்

துலாம்

வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் துலாக்கோல்போல் நியாயத்தின் வழியில் நின்று செயல்படும் துலாராசி அன்பர்களே!

13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மகரராசி என்பது உங்களு நான்காம் இடம். நான்காம் இடத்தில் அமர்ந்த குருபகவான் உங்களுக்குக்கிடைக்க வேண்டிய சுகங்களையும் வசதிகளையும் தடுத்துவந்தார். தற்போது அவர் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5 – ம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்க இருக்கிறார். இது வாழ்க்கையை வளமாக்கும் ஒரு பெயர்ச்சி என்றே சொல்ல முடியும். இதுவரை இருந்த தடைகளும் தாமதங்களும் விலகும்.

குருபகவான்
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள், பிரச்னைகள், சண்டைகள் எல்லாம் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த சச்சரவுகள் நீங்கி இனி அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொது இடங்களில் உங்களுக்கு மரியாதை அமர்க்களப்படும்.

உங்கள் அணுகுமுறை மாற்றிக்கொள்வீர்கள். தனிப்பட்ட ரசனையும் அதிகரிக்கும். குலதெய்வத்துக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடனைச் செய்து மன நிம்மதி பெறுவீர்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும்.

குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீதே விழுவதால் உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். அதேபோன்று 9 ம் இடமான மிதுனம் 11 ம் வீடான சிம்மம் ஆகியவற்றையும் குருபகவான் பார்க்கிறார். 9 ம் வீட்டை குரு பார்ப்பதால் தந்தையுடன் இருந்த கருத்து மோதல்கள் தீரும். உறவினர்களால் இனி ஆதாயம் உண்டாகும். பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

உங்களின் 11 ம் வீடான லாபஸ்தானத்தை குருபகவான் பார்வையிடுவதால் சகோதர உறவுகளுடன் இருந்த வருத்தங்கள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். நன்கு உறங்குவார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் பதவி நிலைக்கும்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணம் அதிகமாகவே வரும். பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். அனுபவம் பளிச்சிடும். சகலரின் அன்பையும் பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் மட்டும் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம்.

சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது ராகு பகவானுக்குரியது. எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உணவு விஷயங்களில் எப்போதும் கட்டுப்பாட்டோடு இருங்கள். செரிமானப் பிரச்னைகள் வந்துபோகும். அதேபோன்று குடும்பத்தில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தனது நட்சத்திரத்திலேயே சஞ்சாரம் செய்கிறார். இதனால் தேவையற்ற கவலைகள் அதிகரிக்கும். சிலர் தவறான பழக்கங்களுக்கு ஆட்படுவீர்கள். மதிப்பு மிக்க பொருள்களைக் கையாளும் போது கவனம் தேவை. அனைத்துப் பணிகளிலும் அலட்சியம் இல்லாமல் பணியாற்ற வேண்டும்.

மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்னைகளில் சிக்கி சிதறிக்கிடந்த உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

வணங்க வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

விருச்சிகம்

யாராக இருந்தாலும் தாட்சண்யம் பார்க்காமல் முகத்திற்கு நேராக உண்மையைச் சொல்லும் துணிவுடைய விருச்சிக ராசி அன்பர்களே!

13.11.21 அன்று குருபகவான் தங்களின் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்குச் செல்கிறார். மூன்றாம் இடத்திலிருந்தபோதும் குருபகவான் உங்கள் ராசிக்குப் பெரிய நன்மைகள் ஏதும் செய்யாமல் இருந்தார். ஆனால் உங்களுக்கு 11 ம் வீட்டைப் பார்த்து அதன் மூலம் உங்களை வெற்றிகரமாக இயங்க வைத்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த நிலை மாறுகிறது. குருபகவான் நான்காம் இடத்தில் அமர்ந்து பலன்தரும் காலகட்டத்தில் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட வேண்டியது அவசியம். அதே நேரம் குருபகவானின் நட்சத்திர சஞ்சாரமும் பார்வை பலமும் உங்களுக்கு அபரிமிதமான நன்மைகளைக் கொடுக்காவிட்டாலும் கெடுபலன்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்!
பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். அதன் பொருட்டு அலைச்சலும் அதிகரிக்கும். சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதும் அவசியம். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு சிந்தித்து அனுபவஸ்தர்களுடன் கலந்து எடுப்பது நல்லது. தாயார் வழியில் செலவுகள் அதிகரிக்கும். அவரின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. நீர், நெருப்பு, மின்சாரத்தைக் கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற சந்தேகம் ஈகோ பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவது எதிர்காலத்துக்கு நல்லது.

குருபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான மிதுனத்தைப் பார்ப்பதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். அந்நியர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். அவர்களின் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். உயர் கல்வி – உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். உணவு விஷயங்களில் மிகவும் கட்டுபாடு தேவை. அதிகமாகவே அல்லது நேரந்தவறியோ சாப்பிடுவதைத் தவிர்க்கவும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

தங்களின் ராசிக்கு பத்தாம் வீடான சிம்மத்தை குருபகவான் பார்ப்பதால் வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொல்லை தந்த பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வேண்டிய காலம் இது. எனவே எதற்கெடுத்தாலும் போலீஸ், கேஸ், கோர்ட் என்று செல்ல முயல வேண்டாம்.

உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான துலாத்தை குருபகவான் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களுக்கு செலவிடுவீர்கள். தினமுமே யோகா, தியானம் செய்யும் நல்ல பழக்கங்களைப் பின்பற்றுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுவெளியில் பேசும்போது வரம்பு மீறி விமர்சனம் செய்ய வேண்டாம். எல்லோரையும் கொஞ்சம் அரவணைத்துப் போங்கள்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். இளமையாக உணர்வீர்கள். பேச்சில் தெளிவும் கம்பீரமும் அதிகரிக்கும். பயம் விலகும். குடும்பத்தின் வருமானம் கணிசமாக உயரும். குழந்தை இன்றித் தவிக்கும் தம்பதிக்கு இந்தக் காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி பலன் கொடுக்கும். சகோதர உறவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள்.

சதயநட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மனதில் துணிவும் நம்பிக்கையும் பிறக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பொது இடங்களில் உங்களுக்கான மரியாதை தவறாமல் கிடைக்கும். தந்தைவழிச் சொத்துகளை சரிசெய்வீர்கள். வேலை தேடும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அயல்நாடு செல்லும் முயற்சிகள் நல்லவிதமாக முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது குருபகவானின் சொந்த நட்சத்திரமாகும். எனவே இந்தக்காலகட்டதில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியே கிட்டும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து உயர்கல்வி, உத்தியோகம் அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கூடி வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கொஞ்சம் அலைக்கழித்தாலும், இறுதியில் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பசுபதீஸ்வரர்

தனுசு

வாழ்வின் சுக துக்கங்களை சமமாகப் பார்க்கப் பழகி அனைவருக்கும் பயன்படுமாறு வாழும் தனுசுராசி அன்பர்களே!

13.11.2021 அன்று குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான மகரத்தில் இருந்து மூன்றாம் இடமான கும்பத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். குருபகவான் உங்களின் ராசி அதிபதி மட்டுமல்ல உங்களின் சுகஸ்தானமான 4 ம் வீட்டுக்கும் அதிபதி. அப்படிப்பட்ட குருபகவான் மூன்றில் சென்று மறைவு பெறுவது அத்தனை நல்ல அமைப்பு என்று சொல்வதற்கில்லை. எதை எடுத்தாலும் நிதானித்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலகட்டமாக இது இருக்கப்போகிறது.

அடுத்தவர் பேச்சைக் கேட்டு எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் இந்தக் காலகட்டத்தில் இறங்கக் கூடாது. ஆனை அளவு கிடைக்கும் பூனை அளவு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி உங்களைப் பலரும் இழுக்கப் பார்ப்பார்கள். ஒருபோதும் அவற்றுக்கு மயங்க வேண்டாம். குடும்பத்துக்குள் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியது ரொம்பவே அவசியம். சகோதர உறவுகளுடன் பேசும்போதும் பெரியவர்களிடம் பேசும்போதும் பதற்றம் இல்லாமல் பேசுங்கள். அதன்மூலம் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க முடியும்.

கே.பி.வித்யாதரன்
அதே வேளையில் குருபகவான் தன் பார்வையால் நற்பலன்களை வாரிவழங்க இருக்கிறார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மிதுனத்தை குருபகவான் பார்ப்பதால் மறைந்திருந்த உங்கள் திறமைகள் வெளிப்படும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் காட்டும் அன்புகாட்டினால் அது ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பிக் கிடைக்கும். அதனால் இல்லறம் இனிக்கும்.

குருபகவானின் பார்வை ஒன்பதாம் வீடான சிம்மத்தின்மீது படுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்துத் திரும்ப வராத தொகை வசூலாகும். நீங்கள் வாங்கியிருந்த கடனை திரும்பச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் தந்தையுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மகன் அல்லது மகளுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். அவர்களின் திருமணமுயற்சிகளும் பலிதமாகும். நண்பர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். கொடுப்பதற்கு முன் வாழ்க்கைத் துணையோடு ஆலோசித்துச் செய்யுங்கள்.

குருபகவான் பதினொன்றாம் வீடான துலாமைப் பார்ப்பதால் செயல்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். பாராட்டுகள் குவியும். சகோதரர்கள் உதவுவார். சொத்துப் பிரச்னைகளில் இருந்த வில்லங்கங்கள் தீரும். அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்துப் போவது அவசியம். பயணத்தின் போதும் கூடுதல் கவனம் தேவை.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் செல்கிறார். இதனால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கூடிவரும்.

சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் செல்கிறார். இதனால் புகழ், கௌரவம், சொல்வாக்கு, செல்வாக்கு கணிசமாக உயரும். பூர்வீக சொத்துகள் கைக்கு வரும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பு ஆகும்.

குருபகவானின் பூரட்டாதி நட்சத்திர சஞ்சாரம்:

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதனால் நன்மைகளே நடைபெறும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். இழந்த பணம் திரும்பக் கிடைக்கும். முடிக்கமுடியாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபகாரியங்களை மகிழ்ச்சியாக செய்துமுடிப்பீர்கள். தாய்க்கு ஏற்பட்டிருந்த ஆரோக்கிய குறைவுகள் நீங்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சியில் குருபகவான் தன் பார்வை மற்றும் நட்சத்திர சஞ்சார பலத்தால் மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறார். சின்னச் சின்ன அலைச்சல்கள் ஏமாற்றங்கள் இருந்தாலும் அவை எல்லம் உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்துவதற்காகவே இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஏகாம்பரநாதர்

மகரம்

தான் கொண்ட கருத்தில் விடாப்பிடியாக நின்று சாதித்துக் காட்டும் வல்லமை கொண்ட மகர ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசியிலிருந்து 13.11.2021 அன்று பெயர்ச்சியாகி கும்பராசிக்குச் செல்கிறார். குருபகவான் உங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தில் அமர்வது இதுவரை இருந்த உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். மனப்போராட்டங்கள் விலகும். வீண்செலவுகள் குறையும். ஈகோ பிரச்னையாலும் வீண் சச்சரவாலு பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். பணபலம் அதிகரிக்கும்.

வீட்டில் நிம்மதி உண்டாகும். சுபநிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பு கனிந்துவரும். உறவினர்கள் விருந்தினர்கள் வீடுதேடி வந்து மகிழ்ச்சியான செய்திகளைச் சொல்வார்கள். இல்லத்தில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் உண்டாகும். உடல் நலக்கோளாறுகள் படிப்படியாகக் குறையும். கடன்கள் தீரும். ராசிக்கு ஆறாம் வீடான மிதுனத்தை குரு பகவான் பார்ப்பதால் எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்களைப் பற்றிய வதந்திகள் காணாமல் போகும். மருத்துவச் செலவுகள் குறையும். குருபகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அயல்நாடுப் பயணங்கள் கூடி வரும்.

பத்தாம் வீடான துலாத்தின் மீது குருபகவானின் பார்வை படுவதால் சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். புதிய வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பதவி கிடைக்கும்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் தடைகள் ஓரளவு நீங்கும். பிரபலங்களின் நட்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். சண்டை பிடித்த சகோதர உறவுகள் இனி இணக்கமாவார்கள். வழக்குகள் வெற்றியாகும். கடன்களைப் படிப்படியாக அடைத்துவிடுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் தேடிவரும். தாயாரின் உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அக்கம்பக்கத்தில் மட்டும் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள்.

சதய நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்:

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் செல்கிறார். இதனால் வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். உறவுகளுக்கு நடுவே உங்கள் மதிப்பு உயரும். திருமண வயதில் இருக்கும் மகர ராசி அன்பர்களுக்குத் திருமணம் கை கூடும். புதிய வீடு அல்லது மனை வாங்கும் முயற்சிகள் பலிதமாகும். வேலையில் பணிச்சுமையும் தொந்தரவான இடமாற்றமும் வந்து செல்லும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணத்தின் போது உரிய பாதுகாப்பு தேவை.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் சுபபலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அதனால் பணப்பற்றாக்குறையும் ஏற்படலாம். பிள்ளைகளால் அலைச்சலும், செலவினங்களும் அதிகரிக்கும் என்றாலும் அது அவர்களின் நலன் சார்ந்தே இருக்கும். தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவதைத் தவிருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். விலையுயர்ந்த நகை மற்றும் செல்வத்தைக் கவனமாகக் கையாளுங்கள். சகோதரர்கள் உதவுவது ஆறுதலாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி இருந்த பிரச்னைகளிலிருந்து உங்களை விடுவித்து வசந்தமான வாழ்வுக்கு உங்களை வழிகாட்டுவதாக அமையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ அக்னீஸ்வரர்

கும்பம்

உயர்ந்த சிந்தனையோடு உதவிக்கு ஓடிவரும் கும்ப ராசி அன்பர்களே!

13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து பெயர்ச்சி ஆகி கும்ப ராசிக்குள் வருகிறார். அதாவது உங்களுக்கு ஜன்ம குருவாக வருகிறார். மகர ராசி என்பது உங்களுக்கு விரைய ஸ்தானம். இதுவரை விரையஸ்தானத்தில் அமர்ந்துகொண்டு பல செலவுகளுக்கும் காரணமாக அமைந்தார். மேலும் தங்களின் இரண்டாம் இடம் மற்றும் பத்தாம் இடத்துக்கு அதிபதியான குருபகவான் விரைய ஸ்தானத்திலிருந்து விடுபட்டு ராசிக்குள் வருவது பல நற்பலன்களையே கொடுக்கும். இதுவரை இருந்துவந்த கஷ்டங்கள் குறையும்.

புதிய வேகம் பிறக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் சரியாகும். திட்டமிட்டபடி செயல்களை முடிப்பீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் அனுகூலமாகும். தூர தேசப் பயணங்கள்கைகூடும்.

அதே வேளையில் ஜன்ம குரு என்றாலே பொறுப்புகள் கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பணிச்சுமை வழக்கத்தைவிட அதிகமாகும். அதிகப்படியான உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களால் முடியாத விஷயங்கள் எது என்பதை அறிந்து கொண்டு முடிவெடுங்கள். வாக்குத் தரும்போது யோசித்துத் தாருங்கள். தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொள்ள வேண்டாம். யாருக்கும் இரவலாக நகைகளைத் தரவேண்டாம்.

மனதில் அச்சங்கள் அதிகரிக்கும். தேவையின்றி பயப்படுவீர்கள். இல்லாத நோயை இருப்பதுபோலக் கற்பனை செய்துகொள்வீர்கள். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதோடு தைரியமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

குரு பகவானின் மிதுனத்தைப் பார்ப்பதால் நற் பலன்கள் உண்டாகும். ஏழரைச் சனியின் பாதிப்புகள் குறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் சிம்மத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளைக் கோலாகலமாக நடத்துவீர்கள்.

குருவின் பார்வை துலாம் ராசியில் படுவதால் பணவரவுக்குக் குறைவு இல்லை. அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது. புதிய பதவி வந்து சேரும்.
அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவைவிட அதிகம் இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீடு மனை வாங்குவது குறித்துத் திட்டமிடுவீர்கள். .

சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் மனதில் லேசான படபடப்பு, பயம், தாழ்வுமனப்பான்மை உண்டாகும். வேற்றுமதத்தவர்கள் உதவி செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்னக் குறைபாடுகள் வந்துபோகும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள்களாக வராமல் நிலுவையில் இருந்த கைமாற்றுத் தொகை மீண்டும் கைக்கு வரும். புதிய நட்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அனுமதி மற்றும் ஒப்புதல்கள் சாதகமாகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய பொறுப்புகள் தேடிவரும் காலம் இது என்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சவால்களை சந்திக்கத் தேவையான சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையையும், பணவரவையும் தரும்.

வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீமுல்லைவனேஸ்வரர்

மீனம்

குறிக்கோளையே மனதில் கொண்டு அர்ஜூனனின் இலக்குபோலச் செயல்படும் மீனராசி அன்பர்களே!

13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து பெயர்ச்சி ஆகி கும்ப ராசிக்குள் வருகிறார். இது மீன ராசிக் காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதைப் பார்ப்போம். மகரம் என்பது தங்கள் ராசிக்கு 11 ம் வீடு. பதினொன்றாம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பது மிகவும் நல்ல அமைப்பு. நல்ல வசதி வாய்ப்புகள் உருவாகும் காலம். தற்போது குருபகவான் 11 ல் இருந்து விலகி 12 ம் இடமான விரையஸ் தானத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். 13.4.2022 வரை அங்கேயே இருந்து பலன்தரப் போகிறார்.

விரைய ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் அநாவசிய செலவுகள் கூடும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பெயர், கௌரவத்துக்காகச் செலவு செய்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வீட்டுக்குள் தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்துகொண்டிருக்காதீர்கள். வேறு யாரையும் நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே கவனித்துச் செய்யுங்கள். நீண்ட நாள்கள் சென்று வழிபட நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

நான்காம் வீடான மிதுனத்தை குருபகவான் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பழைய வாகனத்தை மாற்றுப் புதுவாகனம் வாங்குவீர்கள். பெரிய வீட்டுக்குக் குடிபோவீர்கள். சிலர் ஊர் விட்டு ஊர் செல்ல வேண்டியும் வரலாம்.

6-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் கடன் பாதியாகக் குறையும். நோய் இருப்பதாக இருந்துவந்த அச்சங்கள் விலகும். வெளிநாட்டுக்கு செல்ல எடுத்த முயற்சிகள் சாதகமாகும். எதிர்ப்புகள் விலகும்.

குரு பகவான் 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் நல்லபடி இருக்கும். வழக்குகளில் முன்னேற்றம் உண்டாகும். பங்குச் சந்தை பயன்தரும்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். எனவே இந்தக் காலகட்டத்தில் பணவரவுக்குக் குறைவு இருக்காது. வி.ஐ.பிக்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க முயல்வீர்கள். சகோதரர்களால் உதவி உண்டு. தந்தையின் உடல் நலத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். அவருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டிலும் வெளியிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தேவையற்ற விவாதங்கள் வேண்டாம். செலவுகள் அதிகரிப்பதால் சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். யாரையும் முழுமையாக நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். உறவினர் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். பூரட்டாதி குருபகவானின் நட்சத்திரம். எனவே இதுவரை இருந்த பண நெருக்கடிகள் குறையும். கேட்டிருந்த கடன்தொகை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சில முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி ஓய்வில்லாமல் உங்களைக் கடினமாக உழைக்க வைத்தாலும், அதற்கேற்ற உயர்வில்லையே என சில நேரங்களில் ஏங்க வைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்

குருபெயர்ச்சி பலன்கள் 2021

(பிரதி செய்யப்பட்டது)

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version