2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள அணிகள் இன்று(30.11) சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் உலகக்கிண்ணத்தை நடாத்துவதால் அந்த இரு அணிகளும் நேரடியாக தெரிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை முதல் 8 இடங்களில் நிறைவு செய்த அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளும் T20 தரப்படுத்தல்களில் ஒன்பதாம், பத்தாமிடங்களைப் பெற்றுள்ள பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் தெரிவாகியுள்ளன.
அமெரிக்கா வலயத்திலிருந்து கனடாவும் ஆசியா வலயத்திலிருந்து நேபாளம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் கிழக்காசியா பசுபிக் வலயத்திலிருந்து பப்புவா நியூ கினியா அணியும் ஆபிரிக்கா வலயத்திலிருந்து நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகளும் தெரிவாகியுள்ளன. உகண்டா அணி முதற் தடவையாக ICC தொடர் ஒன்றில் பங்குபற்றுகிறது. ஐரோப்பா வலயத்திலிருந்து அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளன.