களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களனிப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.
களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனையவை நேற்று பிற்பகல் 2 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிக்கையொன்றில் தெரிவித்து இருந்தார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைத்து தாக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் கட்டிவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்வி சாரா ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.