மலையக மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!

இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த வீட்டு திட்டம் தொடர்பில் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் ஆரம்பக்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளை அமைப்பதற்கான பணி இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடங்களை அடையாளம் காணும் பணி முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளதுடன் காணி உரிமையினை வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனி தரப்பிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 10 பேர்ச்சஸ் காணி உரிமையுடன் – சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த வீட்டு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது மலையக மக்களுக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டதுடன் வீடொன்றிற்கு சுமார் 10 லட்சம் ரூபா மதிப்பிடப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் வீட்டு திட்ட பணிகள் தாமதித்தன.

இந்நிலையில் தற்போதைய நிலைமையில் வீடொன்றிற்கு சுமார் 28 லட்சம் ரூபா தேவைப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் இந்திய அரசுடன் கலந்துரையால் மேற்கொண்டு அதற்கான அனுமதியினை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version