குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 59 ஆவது கட்டமாக கம்பஹா புத்பிட்டிய மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு சரியாக உணவுகளை வழங்குவதற்கும், வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்வதற்கும் முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்திய எதிர்கட்சித் தலைவர் இந்த நிலைமையினை மேலும் ஊக்குவிக்கும் ஒரு ஆட்சியே தற்போது உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புது வருடத்தில் பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் இந்நிலை மேலும் அதிகரித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பதற்கு VAT ஐ அதிகரிப்பது மாத்திரம் ஒரே தீர்வல்ல எனவும் கொள்ளையிடப்பட்ட பணத்தை நாட்டிற்கு திரும்பப் பெறுவதற்கான கட்டமைப்பை ஸ்தாபிப்பதே பொறுத்தமான வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருடர்களை நம்பி ஜனாதிபதி,பிரதமர் போன்ற பதவிகள் கிடைக்கப்பெற்றதால் திருடர்களைப் பிடிப்பதற்கு பதிலாக தற்போதைய அரசாங்கம் அவர்களை பாதுகாத்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
வைத்திய துறையில் அண்மை காலமாக இடம்பெற்று வரும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது, அதனை தோற்கடிப்பதற் வாக்களித்த 113 உறுப்பினர்களும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்களென எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொள்ளையிடப்பட்ட வளங்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவர முடியுமாயின் இவ்வாறு வரி அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.