13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி அறிவிப்பு..!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு என்பது, அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் இன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தமது மாகாணத்தின் அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் அனைத்து மாகாணங்களினதும் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.

2024 – 2025ம் ஆண்டு வரை இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக கொள்கை ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள மூலோபாய மாற்றங்கள் குறித்தும் அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியுமெனவும் வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version