நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கான திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வர்த்தக இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சி எனும் பாகுபாடு இன்றி, அனைவரும் செயற்படவேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பிரச்சினைகளை வைத்து, அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என தெரிவித்த அமைச்சர் பிரச்சினைகளுக்கு தீர்வுகைளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரத்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேலும் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட வேண்டும். ஒரு மரத்தை ஒரே நாளில் வெட்ட முடியும். ஆனால் அந்த மரத்தை உருவாக்க பல வருடங்கள் தேவைப்படும். அதேபோன்று தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியைக் கண்டது. எனவே அதனை மீட்டெடுக்க காலம் தேவைப்படுகின்றது. ஒரே நாளில் ஒரு மரத்தை நட்டு ஒரே நாளில் அதன் பலனைப் பெற முடியாது. ஏதோ ஒரு வகையில் கடந்த 74 வருடங்களாக இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் விட்ட பிழைகள் மற்றும் தூர நோக்கற்ற சிந்தனை உண்மையில் இந்த நாடு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்றது.
எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் உரிமை என்பது ஒரு கண்ணாக இருந்தால் அபிவிருத்தி என்பது மறு கண்ணாக இருக்க வேண்டும். உரிமையுடன் கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலைக் கட்டமைப்பதன் ஊடாக மாத்திரம் தான் எமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே இந்த நாட்டில் ஏனைய சமூகங்களும் பயணிக்கின்றன. எனவே நாமும் அவ்வாறு உரிமை மற்றும் அபிவிருத்தி என்ற இரண்டையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்”