பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.
பேரணியானது மட்டக்களப்பு, காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே, மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும்; புதிய சட்ட வரைவுகள் மூலம் ஒரு மனிதனின் ஜனநாயக உரிமைகள் முடக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.