தாய்லாந்து பிரதமர் செட்டா தவ்சின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பெயரில் தாய்லாந்து பிரதமர் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடபடவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், அவர் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார்.
தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தம் வெச்சயச்சாய் மற்றும் இலங்கையின் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர்.
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளின் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள விமான சேவை ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு இரு தரப்பும் எதிர்பார்த்துள்ளதுடன், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்து இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.
தாய்லாந்து பிரதமர், தாய்லாந்து பிரதிப் பிரதமர், பிரதி வெளிவிவகார அமைச்சர், உயர்மட்ட வர்த்தகர்கள் உட்பட 39 பேர் கொண்ட குழுவொன்று இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது