முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இலும், தரம் 11 இல் நடாத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10 இல் நடாத்தவும் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனுடாக, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைவதுடன், தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிப்பதில் பட்டதாரிகளாக இளம் வயதிலேயே பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறவும் முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக்கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்ப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடாக, பாடசாலைக் கல்விக்காக பல பாடசாலை இணைத்து ஒரு கொத்தணிக் கல்வி முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள அதிபர் தர வெற்றிடங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.