கடற்கரையை சுத்தமாக பேண புதிய செயலி…

கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் Beach Cleanup Coordination செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிலைபேறான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் சமுத்திரம் மற்றும் கரையோரத்தின் தூய்மையைப் பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு இந்த புதிய செயலி உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீட்டுடன் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறித்த தொலைபேசி செயலியை இப்பணியின் சரியான ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. 

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த உள்ளிட்ட அரச அதிகாரிகள், கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version