மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2024.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (13.03) யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.க.நந்தகுமார், சிறப்பு விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை பாடசாலை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், கௌரவ விருந்தினர்களாக வேல்ட் விஷன் நிறுவன பிரதிநிதி, சிவபூமி பாடசாலை அதிபர் கலைவாணி குகதாசன், கோப்பாய் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலைய பொருளாளர் அ.ரங்கடம்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். மாற்றுத் திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் இந்த தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றுள்ளது.

இவ் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version