அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன –  இராஜாங்க அமைச்சர் ஜானக 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.

சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா திட்டமும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முன்னர் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும்  இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டார். 

மேலும், 29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், மேலதிகமாக எஞ்சியுள்ள 2600 உத்தியோகத்தர்களின் வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். 

இந்த ஆண்டில் ஓய்வு பெறுபவர்களுக்கு பதிலாக PL 1-2 பிரிவுகளுக்கு மேலதிகமாக உள்ள ஊழியர்களை பணியமர்த்த அனுமதி அளித்துள்ளதாகவும்  இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் அனைத்து அமைச்சுக்களின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். 

நாட்டை மீண்டும் கடந்த காலங்களில் இருந்த நிலைக்கு பின்னோக்கி கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். இப்படி இடையூறு செய்பவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version